“மேகதாட்டு அணைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியிருப்பது தமிழ்நாட்டை திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சியாகும். இந்த வஞ்சக வலையில் நாம் ஒருபோதும் சிக்கிக் கொள்ளக்கூடாது” என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது.
“கடந்த காலத்தில் காவிரியின் துணை ஆறுகளான கபினி, ஏமாவதி, ஏரங்கி முதலியவற்றில் அணைகளைக் கட்டும் பிரச்சனையில் பேச்சுவார்த்தை என்ற பெயரால் காலத்தைக் கடத்தி அதற்கிடையில் இந்த மூன்று ஆறுகளிலும் அணைகளை கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இப்போதும் அதே தந்திர வலை விரிக்கப்படுகிறது. தென்மாநிலங்களில் கர்நாடகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பா.ச.க.வினால் காலூன்ற முடியவில்லை. எனவே, கர்நாடகத்தில் உள்ள தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள பா.ச.க. முயலுகிறது. ஒன்றிய அரசு ஒருபோதும் மேகதாட்டு திட்டத்தில் தமிழகத்திற்கு நீதி வழங்காது. எனவே, ஒருபோதும் காவிரிப் பிரச்சனைக் குறித்து கர்நாடகத்துடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்தக்கூடாது என வலியுறுத்துகிறேன்”