பணமதிப்பிழப்பில் உயிரிழந்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டவில்லை, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் அவர்களிடம் கருணைகாட்டினீர்களா என்று பிரதமர் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹால்டியா நகரில் நேற்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில் “மம்தாவிடம் மக்கள் அன்பான, கருணையான ஆட்சியை எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்களுக்கு கிடைத்தது கொடூரமான ஆட்சிதான். காங்கிரஸ், இடதுசாரிகளுடன் சேர்ந்து மேட்ச் பிக்ஸிங் செய்கிறது. வரும் தேர்தலில் மக்கள் திரிணமூல் காங்கிரஸுக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு ராம்கார்டு காட்டுவார்கள்” என கடுமையாகவிமர்சித்திருந்தார். பிரதமர் மோடியின் காட்டமான பேச்சுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பதிலடி கொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் “ மேற்கு வங்க மக்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ரெட் கார்டு காட்டுவார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியை குறைகூறுவதற்கு பதிலாக, பிரதமர் மோடி, விவசாயிகள் பிரச்சினை மீதும், விவசாயிகள் மீதும் தனது நிலைப்பாட்டை தளர்த்தலாம். 70 நாட்களாகப் போராடும் விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் மோடி கருணை காட்டலாம்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்து விட்டார்கள். ஆனால், மோடியிடம் இருந்து கருணையை அன்பை(மம்தா) பார்க்கவில்லை. கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஏராளமான மக்கள் உயிரிழந்தார்கள். அப்போது கூட பிரதமரிடம் இருந்து கருணையை பார்க்கவில்லை. கருணையைப் பற்றி பேசுவதைக் குறைத்துக்கொண்டு அதை செயலில் காட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி. சுகந்து சேகர் ராய் கூறுகையில் “ உத்தர காண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் மக்கள் உயிரிழந்துவிட்டார்கள், ஆனால், மேற்கு வங்கத்தில் அரசியல் செய்வதில் பிரதமர் மோடி பரபரப்பாக இருக்கிறார்” எனத் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில் “ திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் இடையே எந்தவிதமான கூட்டும்இல்லை. பாஜக வளர் வதற்கு திரிணமூல் காங்கிரஸ் துணை செய்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி பாஜகவும், டிஎம்சி கட்சியும் ஏன் கவலைப்படுகிறார்கள். பாஜகவுடனும், டிஎம்சியுடனும் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம்” எனத் தெரிவி்த்தார்.