பெருந்தொற்று நோயின் சர்வதேச பரவல் அனைத்து தொழில் துறையையும் வெகுவாக முடக்கியிருக்கிறதென்றாலும், திரைப்படத் தொழில் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது, பிரச்சனைகளை சற்றே இலகுவாக்கி பல படங்களின்
பின் தயாரிப்புப்பணிகளை துவக்கச் செய்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பாணிக் பிரதான பாத்திரங்களில் நடித்த, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘யாருக்கும் அஞ்சேல்’. கோவிட் 19 பிரச்னைக்கு முன்பே, படக்குழு முழு படப்பிடிப்பையும் பூர்த்தி செய்துவிட்டது என்றாலும், பிரச்னை தீவிரமானதால்,தொடர்ந்து பின் தயாரிப்புப் பணிகளைத் தொடர முடிய வில்லை. தற்போது படக்குழு டப்பிங் பணிகளைத் தொடங்க, பிந்து மாதவியின் குரல் பதிவு பணிகள் இன்று நடைபெற்றன. சமூக இடைவெளி மற்றும் அரசு அறிவித்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியான முறையில் பின்பற்றி தொடர்ந்து மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.
ஊட்டியில் உள்ள தங்கள் பாரம்பரிய சொத்தை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரிகள் இருவருக்கும் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான பிரச்னைகளையும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டு
போராடுகிறார்கள் என்பதையும் விறுவிறுப்பாக விவரிக்கும் படம் ‘யாருக்கும் அஞ்சேல்’. தர்ட் ஐ என்ட்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜூலு மார்கண்டேயன் தயாரிக்கும் இப்படத்தில் பிந்து மாதவியும் தர்ஷனா பாணிக்கும் துணிச்சல் மிக்க சகோதரிகளாக நடித்திருக்கின்றனர். சவால் மிகுந்த ஊட்டியின் தட்பவெட்ப
சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தொடர்ந்து முப்பது நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.