அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளமிடப் படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரு மான ஹெச்.டி.குமாரசாமி குற்றம் சாட்டியுள் ளார். கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”நான் சமீபத்தில் சில விஷயங்களை அறிந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் நம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்தப்போகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. கர்நாடக மாநிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பலரிடம் நிதி கோருகிறார்கள். நிதி கொடுக்காதவர்களின் வீடுகள் தனியாக அடையாளமிடப் பட்டு வருகின்றன. நிதி கொடுத்தவர்களின் வீடுகள் தனியாக அடையாளமிடப்பட்டு வருகின்றன. இது எதற்கு எனத் தெரியவில்லை. ஜெர்மனியில் நாஜிக்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோன்றுதான் இங்கும் நடக்கிறது. லட்சக்கணக்கான யூதர்கள் வாழ்க்கையை இழந்தார்கள், கொல்லப்பட்டார்கள். ஜெர்மனியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்தபோதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது. நாஜிக்கள் மாதிரியை ஆர்எஸ்எஸ் பின்பற்றினாஸ் ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பலரும் கவலைப்படுகிறார்கள். தங்களின் வெளிப்படையான கருத்துகளைக் கூறுவதற்கும் சிலர் மறுக்கிறார்கள். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் இந்த தேசத்தில் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தேசம் அறிவிக்கப்படாத அவசர நிலையின் கீழ் இருக்கிறது. ஊடகத்தினர் அரசுக்கு எதிராகத் தங்கள் குரலை உயர்த்தினால் தங்களுக்கு என்ன நடக்கும் எனத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கவில்லை. எடியூரப்பாவின் குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. முதல்வர் எடியூரப்பா தனது தொகுதிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்குகிறார். ஆனால், எனது தொகுதிக்கு ரூ.285 கோடிதான் ஒதுக்கியுள்ளார். வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் தருவதாக மாநில அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், பலருக்கும் ரூ.1 லட்சத்துக்கு மேல் கிடைக்கவில்லை. ஆனால், எந்த விண்ணப்பதாரரும் பணத்தை எடுக்கவில்லை என்று அரசு தற்போது கூறுகிறது”. இவ்வாறு ஹெச்.டி. குமாரிசாமி தெரிவித்தார்.