“ரியா’வினால் ஏற்படும் அபாயங்கள் ஏராளமானவை. இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) முஸ்லிம் சமுதாயத்தின் மீது தமக்குள்ள அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக, ஏனைய சீர்கேடுகளைவிட ரியாவைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டுள்ளார்கள். மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். “நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித் தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்ட போது, அவர்கள் “ரியா’ என்று பதிலளித்தார்கள் ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்
மற்றொரு நபிமொழியில் தஜ்ஜாலின் தீங்குகளை விட அதிகமாகத் தனது சமுதாயத்தினரை “ரியா’ பாதிக்குமோ என்று இறைத்தூதர் (ஸல்) அஞ்சியிருப்பது வெளிப்படுகின்றது. அபூஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களைவிட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தெரிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்கரித்துக் கொள்கிறார்.” என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா
இந்த நபிமொழியை நாம் அலசிப் பார்க்கும் போது, “ரியா’வின் உண்மையான அபாயங்களை உணர முடியும். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட காலம் முதல், இறுதித் தீர்ப்பு நாள் வரை, மனித குலம் அனுபவிக்கும் மிகப் பெரும் சீர்கேடு தஜ்ஜாலினால் ஏற்படுவது தான். நபி நூஹ் (அலை) முதல் அனைத்து இறைத் தூதர்களும் தங்கள் சமுதாயத்தவர்களிடம் இந்தப் பேரபாயம் குறித்து எச்சரித்து ள்ளார்கள். தஜ்ஜாலுடைய காலத்தில் வாழும் மக்கள் அவனை விட்டு ஓடி விட வேண்டுமென்றும், ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப் பிறகும் அவர்கள் தஜ்ஜாலின் அபாயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டு மென்றும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும், தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட “ரியா’வினால் ஏற்படும் தீங்குகள் குறித்துத் தான் அதிகமாக அஞ்சுவதாக மேலே குறிப்பிட்ட தனது அமுத மொழியில் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். யாருக்கு உள்ளம் உள்ளதோ அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. திருக்குர்ஆன் – 50 : 37
“ரியா’ மறைவான தன்மையுடையது. எனவே, அதன் அபாயங்கள் மேலும் கடுமையானதாக அமைந்துள்ளன. அபூ மூஸா அல் அஷ்அரீ அவர்கள் அறிவிக் கின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்குப் பிரசங்கம் செய்தார்கள். அப்போது அவர்கள், “மனிதர்களே! இந்த இணைவைப்பை (அதாவது ரியாவை)க் குறித்து அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைக் காட்டிலும் புலப்படாத ஒன்றாக அது அமைந் துள்ளது.” ஆதாரம் : ஸஹீஹ் அல் தர்கீப் வல் தர்ஹீப் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: “நிலவில்லாத ஓரிரவின் நடுவில், கருமை நிறப் பாறை யில் ஊர்ந்து செல்லும் எறும்பைவிடப் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது”. ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கதீர் (இன்னொரு சிறிய இணைவைப்பு குறித்து இப்னு அப்பாஸ் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்த போதிலும், ரியா போன்ற சிறிய இணைவைப்பிற்கும் இது பொருந்துவதாக அமைந்துள்ளது.) ரியாவின் தீங்கிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூட அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். இறுதி ஹஜ் பயணத்திற்கு முன்பு அவர்கள் அல்லாஹ்விடம்:- “அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ரியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாயாக” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி
அபு அம்மார் யாசீர் அல் காழி
தமிழில்: எம்.எச்.ஜவாஹிருல்லா