ரூபாய் 18.4 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன

தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலை தொடர்ந்து, துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ எக்ஸ் 1644-இல் இருந்து இறங்கி வெளியே செல்லும் வழியை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்த சென்னையை சேர்ந்த முகமது ரபி, 23, என்பவரை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர். அதிகாரிகளின் கேள்விக்கு மழுப்பலான பதிலை அவர் அளித்ததால், சோதனைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது பையில் டேப் ஒட்டப்பட்டு, அதில் ஒரு பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை சுங்க அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார். அந்த பொட்டலத்தில் 194 கிராம் எடையுள்ள ரூ 9.8 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலி இருந்தது கண்டறியப்பட்டது. மற்றுமொரு சம்பவத்தில், துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்தில் வந்திறங்கிய சென்னையை சேர்ந்த அப்துல் கரீம், 35, வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். சோதனையின் போது, அவரது உடலில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட ரூ. 8.6 லட்சம் மதிப்புடைய 172 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூபாய் 18.4 லட்சம் மதிப்புடைய 366 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் படி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.