எமிரேட்ஸ் விமானம் ஈ கே 544 மூலம் திங்கள் அன்று துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய நான்கு பயணிகள் தங்கத்தை கடத்தி வந்ததாக ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனையிட்ட போது, ஒரு பயணியின் முகக் கவசத்தில் மறைத்து வைத்துத் தைக்கப்பட்டிருந்த 114 கிராம் தங்கப் பசை கண்டறியப்பட்டது. 50 கிராம் எடையுள்ள ஒரு தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களது உடலுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 16 பொட்டலங்கள் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ 97.82 லட்சம் மதிப்புடைய 1.84 கிலோ தங்கம் சுங்க சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, இண்டிகோ விமானம் 6 ஈ 66 மற்றும் எமிரேட்ஸ் விமானம் ஈ கே 542 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ஏழு பயணிகள் தங்கத்தை கடத்தி வந்ததாக ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனையிட்ட போது, ஒருவரது ஜீன்ஸ் கால்சட்டைக்குள் மறைத்து வைத்து தைக்கப்பட்டிருந்த தங்கப் பசையைக் கொண்ட நெகிழி பொட்டலங்களும், மற்றொரு பயணியின் கால்சட்டைப் பையில் இருந்து வெட்டப்பட்ட தங்கத் துண்டுகளும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மற்ற ஐவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களது உடலுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்களது உடல்களில் இருந்து 12 பொட்டலங்கள் தங்கப் பசையும், ஜீன்சில் இருந்து ஆறு தங்கப் பட்டைகளும், கால்சட்டைப் பையில் இருந்து ஐந்து வெட்டப்பட்ட தங்கத் துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ 87.48 லட்சம் மதிப்புடைய 1.65 கிலோ தங்கம் சுங்க சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் ரூ 1.85 கோடி மதிப்புடைய 3.5 கிலோ தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. ஐவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.