சென்னையில் இருந்து துபாய் செல்வதற்காக வந்த பயணி ஒருவரிடம் ரூ.7.09 லட்சம் மதிப்புள்ள 8000 யூரோக்களை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய் செல்வதற்காக வந்த திருவள்ளூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது கைப்பையை சோதனையிட்ட போது, 4000 யூரோக்கள் 50 யூரோ தாள்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் 100 யூரோ நோட்டுக்களை கட்டாக சுருட்டி தனது ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தார். அதை பிரித்துப் பார்த்தபோது, 4000 யூரோக்கள் இருந்தன. மொத்தம் அவரிடம் 8000 யூரோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.7.09 லட்சம். இந்தப் பணம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.