துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஃபிளை துபாய் 8517 மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐஎக்ஸ்-1644 ஆகிய விமானங்களில் துபாயில் இருந்து சென்னை வந்த திருச்சியை சேர்ந்த நாசர் அலி சிராஜுதின் (36), முகமது ஆகிப் பாபு பாட்ஷா (20), ஆகியோரும், சென்னையைச் சேர்ந்த முகமது கடாபி (49), என்பவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களை சோதனையிட்டதில், ஆறு பொட்டலங்களில் (தலா 3) தங்கப் பசையை உடலில் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. இவற்றுடன், 81 கிராம் எடையுள்ள 2 தங்கத் துண்டுகளும், 1.88 கிலோ எடையுள்ள 8 தங்கப் பசைப் பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 1.78 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ 90.4 லட்சமாகும். நாசர் அலி மற்றும் முகமது ஆகிப் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க ஆணையர் செய்தி குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.