லண்டனில் இருந்து டெல்லி வந்த சென்னை பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில் அதன் மாதிரி, மரபியல் ஆய்வுக்காக தேசிய வைராலஜி நிறுவனத் துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப் பாடுகளை பிரிட்டன் அரசு ஞாயிற்றுக் கிழமை முதல் விதித்துள்ளது. பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இந்தியாவும் இன்று இரவு முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா வுக்கு விமானங்களை இயக்கத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் லண்டனில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 266 பயணிகளுடன் டெல்லி வந்து சேர்ந்தது. பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியா வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. அதன்பின் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு பயணி டெல்லியிலிருந்து இணைப்பு விமானம் மூலம் சென்னைக்குச் செல்ல வேண்டியவர். இந்தப் பயணிகளும் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். லண்டனில் இருந்து திரும்பிய சென்னையைச் சேர்ந்த பயணிக்கு சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்டியூட்டில் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யபப்பட்டது. இதையடுத்து, அந்தப் பயணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில் “ லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த பயணிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்தப் பயணியின் மாதிரி புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்துக்கு மரபணு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும். பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸின் மரபணுவும், இந்த பயணியின் மாதிரியில் இருக்கும் வைரஸின் மரபணுவும் ஒரேமாதிரியாக இருக்கிறதா என ஆய்வு செய்யப்படும். ஒருவேளை அவ்வாறு இந்தப் பயணியின் மாதிரியோடு ஒத்துப்போனால், கடந்த 10 நாட்களில் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் லண்டனில் இருந்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் கண்காணிக்கப்படும். அனைத்து சர்வதேச பயணிகளும் சென்னைக்கு வரும்போது கரோனாப ரிசோதனை செய்யப்படுகிறது. மத்தியஅரசின் விதிமுறைகளின்படி 14 நாட்கள் வீட்டிலோஅல்லது ஹோட்டலிலோ கண்டிப்பாக தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.