வங்கியில் இருந்து பேசுவதாக அரசு அதிகாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி

பெரம்பூர் அரசு அதிகாரியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, 1 லட்சம் ரூபாய் ஆட்டை போட்ட மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். பெரம்பூர், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன், 55. இவர், தலைமை செயலகத்தில் இணை செயலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவரது மொபைல் போன் எண்ணுக்கு, மர்மநபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சத்யநாராயணன் கணக்கு வைத்திருக்கும் குறிப்பிட்ட வங்கியின் விசாரணை பிரிவு அலுவலர் பேசுவதாக அறிமுகப் படுத்தி கொண்டார். தொடர்ந்து, ‘வாடிக்கையாளரின் வங்கி கணக்கு பாதுகாப்புக்காக, கூடுதல் விபரங்களை பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டும்’ எனக் கூறினார்.
அவரது பேச்சை, உண்மை என்று நம்பிய சத்யநாராயணன், மற்ற விபரங்களுடன், ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார்.  சில நிமிடத்திற்கு பின், அவரது கணக்கில் இருந்து, 1 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டது குறித்த குறுந்தகவல், அவரின் மொபைல்போனுக்கு வந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டது சத்யநாராயணனுக்கு தெரியவந்தது. இது குறித்து பெரவள்ளூர் போலீசில் புகார் செய்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.