வரும் 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகள் ரயில் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதத்தில், வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். வரும் 14-ம் தேதி புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் நினைவாக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் அதில் எந்தப் பலனும், முடிவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே தங்கள் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாகக் கடந்த சில வாரத்தில் நாடு முழுவதும் சில மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். இந்நிலையில் தங்கள் அடுத்தகட்டப் போராட்டமாக வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில், “ வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். வரும் 12-ம் தேதி முதல் ஒரு வாரம் நடக்கும் போராட்டத்தால் ராஜஸ்தானில் சுங்கச் சாவடி களில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இதுதவிர கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத் தும் விதமாக வரும் 14-ம் தேதி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத் தும் நிகழ்ச்சியும் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளனர். முன்னதாக, பாரதிதய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் அளித்த பேட்டியில், “ மத்தியில் ஆட்சி மாற்றத் துக்காக விவசாயிகள் யாரும் போராடவில்லை. அது நோக்கமும் இல்லை. எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அதனால்தான் எங்களின் பல்வேறு தலைவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து பேசி வருகிறார்கள். எங்கள் பிரச்சினைகளை மத்திய அரசு தீர்த்துவைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். மத்திய அரசு அதன் கடமையைச் செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வோம்” எனத் தெரிவித்தார்.