பிரதமர் நரேந்திர மோடி, இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-ஐ காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். “உள்ளடக்கிய புத்தாக்கம்- திறன்மிகுந்ததும், பாதுகாப்பானதும், நிலையானதுமானது” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். பிரதமரின் தொலைநோக்கான ‘தற்சார்பு இந்தியா’, ‘டிஜிட்டல் உள்ளடக்கம்’, ‘நீடித்த மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் புதுமை’ ஆகியவற்றை ஊக்குவிப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும். அந்நிய, உள்நாட்டு முதலீடுகளை அதிகரிப்பது, தொலைத்தொடர்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பம் மேம்படும் நிலையில், செல்போன்கள் மற்றும் சாதனங்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் உருவாகி வருவது குறித்து எச்சரிக்கை விடுத்தார். மின்னணுக் கழிவுகளை நல்ல முறையில் கையாள்வதற்கும், சுழற்சிப் பொருளாதாரத்தை உருவாக்கவும் பணிக் குழு உருவாக்க முடியுமா என்பது பற்றி பங்கேற்பாளர்கள் யோசிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். எதிர்காலத் தேவையில் நாம் வேகமாக முன்னேறி, பல மில்லியன் இந்தியர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்காக, உரிய காலத்தில் 5 ஜி தொழில்நுட்ப வசதியைத் தொடங்குவதற்கு ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வரக் கூடிய தொழில்நுட்பப் புரட்சியில் மக்களின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து, திட்டமிட வேண்டியது முக்கியம் என்று பிரதமர் கூறினார். செல்போன் தொழில்நுட்பம் உள்ள காரணத்தால் தான், பல மில்லியன் பேருக்கு, பல பில்லியன் டாலர் அளவுக்கான ஆதாயங்களை அளிக்க முடிந்துள்ளது என்றும், இதனால் தான் பெருந்தொற்றுக் காலத்தில் ஏழைகளுக்கும், பிரச்சினையில் சிக்க வாய்ப்புள்ளவர்களுக்கும் நம்மால் உதவிகளை அளிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார். செல்போன் தொழில்நுட்பம் இருப்பதால் தான் பல பில்லியன் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளைச் செய்ய முடிகிறது, அது பரிவர்த்தனைகளை முறைப்படுத்துபவையாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் ஆக்கச் செய்துள்ளது என்று அவர் கூறினார்.