விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். ஏற்கனவே, கந்து வட்டி கொடுமையால், கடந்த 2017ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கே இதுவரை விடை தெரியாத நிலையில், தற்போது மோகன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, 27 பெண்களை தன் இச்சைக்கு சிவராஜ் என்ற கொடூரன் பயன்படுத்திக்கொண்டான் என்பது நமக்கு நினைவிருக்கும். கந்துவட்டி கொடுமையால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கல்விக்காக கடன் வாங்கி அடைப்பதற்கு வழியில்லாமல், இளைஞர்கள் தற்கொலை, சிறு தொழில் நிறுவனங்கள் கந்துவட்டிக் கும்பலிடம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை, கடன் வாங்கிய தாய்மார்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படுவது என்று நாளுக்கு நாள் கந்துவட்டி கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. தொடரும் கந்து வட்டி கொடுமையால், அதனை ஒழிக்கும் விதமாக கடந்த 2003ஆம் ஆண்டு, கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அச்சட்டமானது வெறும் ஏட்டளவில் தான் உள்ளது. தமிழகம் முழுவதும் கந்துவட்டிக் கும்பலுக்கு ஆதரவாக காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மக்கள், தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி, உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் பல வகையான வட்டி முறைகளை கையாண்டு அவர்களை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. கந்து வட்டி கும்பலின் கொடுமையை தாங்க முடியாமல், பல்வேறு உயிரிழப்புகள் தெரிந்தும், தெரியாமலும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோகனை பணத்தை திருப்பிக் கட்டக் கோரி, அவருக்கு கந்துவட்டிக் கும்பல் மிரட்டியுள்ளது. இதன் காரணமாகவே, மோகன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே இனிமேலாவது தமிழக அரசும், காவல்துறையும் மெத்தனப் போக்கை கைவிட்டு, மோகன் குடும்பத்தினரின் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டி தொடர்பான வழக்குகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மோகன் குடும்பத்தினரை இழந்து வாடும் குடும்பத்தினர், சுற்றத்தினர், நண்பர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேல்முருகன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.