விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

புதுச்சேரி, செப்டம்பர் 16, 2020: கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு மருந்துகளோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கான மருந்துகளோ இல்லாத நிலையில் மருத்துவ உலகம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஆரம்பக் கட்டத்தில் சித்த மருந்தான கபசுர குடிநீர் வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்காக அனைவருக்கும் தரப்பட்டது. பிறகு வைரஸ் தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் இல்லாத மற்றும் மிதமான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு அலோபதி மருந்துகளோடு சித்த மருந்துகளும் தரப்பட்டன. சித்த மருந்துகள் சிறப்பாகச் செயல்பட்டு வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதை அறிந்த பிறகு சித்த மருத்துவத்துக்கு என்றே “கோவிட் சிறப்பு சித்த மருத்துவ மையங்கள்” ஏற்படுத்தப்பட்டன. இந்த மையங்களில் சித்த மருந்துகளும் பாரம்பரிய உணவுகளும் நோய் அணுகா நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.அண்ணாமலை மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவமுறை ஹோமியோபதி இயக்குனரகத்தின் இயக்குனர் திரு. எஸ்.கணேஷ் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மகளிர் விடுதியில் “கோவிட் சிறப்பு சித்த மருத்துவ மையம் 21.07.2020 அன்று 155 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் பொறுப்பாளராக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் இரா.மாலா செயல்பட்டு வருகின்றார்.

”சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து பல கொரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். வைரஸ் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்ததற்கான எஸ்.எம்.எஸ். அல்லது அறிக்கை, ஆதார் அட்டையுடன் இங்கு சிகிச்சைக்கு சேரலாம். சித்த மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுகின்றனர். முழு ஈடுபாட்டுடன் சிகிச்சை அளிக்கின்றனர். தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் இவர்கள் பணியாற்றி சித்த மருத்துவத்துக்கு நற்பெயர் ஈட்டித் தருகின்றனர்” என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் இரா.மாலா பெருமையுடன் குறிப்பிடுகின்றார். இதுவரை இந்த சித்த மருத்துவ மையத்தில் இருந்து 892 நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றுள்ளனர். தற்போது 90 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அரசு சித்த மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சந்தியா, டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் யோகா நேச்சுரோபதி டாக்டர் மணிகண்டன் ஆகியோர் முழு ஈடுபாட்டுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். குணமடைந்து திரும்புவோருக்கு தமிழக அரசின் ஆரோக்கியப் பெட்டகத்தைக் கொடுத்து அனுப்புகிறோம். இதில் சிகிச்சைக்கு பின் உடல் நலம் மேம்பட அமுக்கரா சூரண மாத்திரையும் நெல்லிக்காய் லேகியமும் உள்ளது என்று டாக்டர் சந்தியா குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் குறைத்து விடுகின்றது. ஓரளவுக்கு மேல் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மூச்சுத் திணறல் ஏற்படும். இங்கு நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படுகின்றது. அளவு குறைந்தால் நோயாளிகளுக்குத் தகுந்தவாறு பல்வேறு சித்த மருந்துகளைத் தருகின்றோம். விரைவிலேயே அவர்களின் ஆக்சிஜன் அளவு சீரடைந்து விடுகின்றது. திரிகடுக சூரணத்தை மால்தேவி செந்தூரத்துடன் கலந்தோ அல்லது ஆடாதோடை மணப்பாகுடன் சிவனார் அமிர்தம் கலந்தோ தருகின்றோம். அதேபோல் பிரமானந்த பைரவ மாத்திரையை இஞ்சி தேனுடன் கலந்து தருகின்றோம். மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்திவிட்டால் போதும். நோயாளி குணமடைந்து விடுவார் எனப் பெருமிதத்துடன் கூறுகின்றார் டாக்டர் பாலசுப்பிரமணியன்.இந்த மையத்தில் சித்த மருத்துவத்தின் அடிப்படையான ”உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கோட்பாடு கடைபிடிக்கப்படுகின்றது. தினமும் இருவேளை கபசுர குடிநீர், நிலவேம்புக் குடிநீர், மூலிகைத் தேநீர், பயறு/சுண்டல் ஆகியன தரப்படுகின்றன. அதேபோல் சித்த மருந்துகள்/மாத்திரைகள் இருவேளை தரப்படுகின்றன. தூங்கும் முன்பு மஞ்சள், மிளகு, பனங்கல்கண்டு சேர்க்கப்பட்ட பால் தரப்படுகின்றது. காலை, இரவு சிற்றுண்டியும் மதியம் சாப்பாடும் வழங்கப்படுகின்றன.

”கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் தனித்திருப்பதால் மனச் சோர்வுக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதனால் அவர்களுக்கு நகைச்சுவை சிகிச்சை அளிக்கப்படுவதோடு யோகா பயிற்சிகளும் பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுவதாக” யோகா & நேச்சுரோபதி டாக்டர் மணிகண்டன் கூறுகின்றார்.
பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளான வேதி பிடித்தல், பொட்டணத்தை முகர்தல், வாய் கொப்புளித்தல் போன்றவையும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. சூரியக் குளியலும் தினமும் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் நோயாளிகள் தங்கி இருக்கும் அறைகள், வெளியிடங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு இரு முறை பாரம்பரிய முறையில் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் 5 முதல் 7 நாட்களுக்குள் முற்றிலும் அறிகுறி நீங்கியவர்களாக மாறி வீடு திரும்புகின்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் இங்கு நானே விரும்பி சிகிச்சைக்கு வந்தேன். சிகிச்சை மிகச் சிறப்பாக இருந்தது. இப்போது குணமாகி வீடு திரும்புகிறேன் என்றார். அதேபோல் விருத்தாசலத்தைச் சேர்ந்த அனந்தகாவேரி என்ற பெண்மணி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எனக்குப் பரிசோதனை செய்து பாசிட்டிவ் என்றார்கள். சிகிச்சைக்கு இங்கு அனுப்பினார்கள். சித்தா டாக்டர்கள் நன்றாக சிகிச்சை அளித்தார்கள் என்கிறார். இறப்பு–0% ஆரோக்கியம்–100% என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் இந்த கோவிட் சிறப்பு சித்த மருத்துவ மையம் நமது பாரம்பரியமான சித்த மருத்துவ முறைக்கு புகழ் சேர்ப்பதாக உள்ளது.