நடப்பாண்டு 2021 ஜனவரி 31ஆம் தேதி வரையிலும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் பயிர்கடன் நிலுவைத் தொகை, 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப் பேரவையில் விதி 110ன்கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி கோரி நீண்ட காலமாக போராடி வரும் விவசாயிகளுக்கு இது ஓரளவு ஆறுதல் அளிக்கும். ஆனால் இந்தக் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் சுயசார்புக்கு உதவாது. உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை ஏற்று குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து, அரசு கொள்முதல் செய்யும் சட்டப்பூர்வ ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டங்களும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கி செயல்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உழவர் தின விழாக் கூட்டத்தில் “தி.முக ஆட்சி அமைந்ததும் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும்” என அறிவித்ததும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய அழுத்தம் கொடுத்துள்ளது. அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வரவேற்க தக்கது. எனினும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளிலும், கிராமிய வங்கிகளிலும் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காது என்பது பெரும் பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை அரசு உணர வேண்டும். தேசிய வங்கிகளிலும், கிராமிய வங்கிகளிலும் நிலுவையாக உள்ள விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுத்து நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.