விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷா ரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா: வைகோ கண்டனம்

வேளாண் பகைச் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த மூன்று மாத காலமாக டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய பாஜக அரசு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்று வருகின்றது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், பத்திரிகை, ஊடகவியலாளர்கள், திரைக் கலைஞர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் விவசாயிகளின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்தான் சுவீடனைச் சேர்ந்த புகழ்பெற்ற இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க், பிப்ரவரி 4 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். வேளாண் பகைச் சட்டங்கள் குறித்தும், அதனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் கட்டுப்பாடான, திட்டமிடப்பட்ட அறவழிப் போராட்டம் குறித்தும் ஆவணமாக்கி உள்ள சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க், அதனை ‘டூல்கிட்’ எனப்படும் ‘தகவல் தொகுப்பாக’ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதனால் உலக அளவில் இந்திய விவசாயிகள் போராட்டம் ட்ரெண்ட் ஆகிவிட்டது. உடனே இந்திய அரசு அவர் மீது டெல்லியில் வழக்குப்பதிவு செய்தது.

இச்சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளம் சூழலியலாளர் திஷா ரவி என்ற பெண், சுவிடன் சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க் ‘தகவல் தொகுப்பை’ டுவிட்டரில் பகிர்ந்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதற்காக, திஷா ரவி மீது 124-ஏ தேசத்துரோகச் சட்டத்தை ஏவிய டெல்லி காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த அடக்குமுறையைக் கண்டித்து மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜாக், மூத்த வழக்கறிஞரும் – அரசியல் சட்ட நிபுணருமான ராகேஷ் திவேதி, மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

திஷா ரவி போன்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் விமானப் பொறியாளரும், சூழலியல் செயல்பாட்டாளருமான சாந்தனா முலக் ஆகியோரையும் தேசத்துரோக வழக்கில் கைது செய்ய மத்திய அரசு முனைந்துள்ளது. ஜனவரி 26, குடியரசு நாளன்று, டெல்லியில் விவசாயிகள் செங்கோட்டையை நோக்கி நடத்திய பேரணியில் வன்முறை திட்டமிட்டு ஏவப்பட்டதை ஆதாரங்களுடன் பத்திரிகை, ஊடகங்களில் செய்தி வெளியிட்டதற்காக, மிருணால் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் சூகா, பரேஷ் நாத் மற்றும் அனந்த நாத் ஆகிய ஆறு பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது மக்களாட்சி கோட்பாடுகளுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கை ஆகும்.

மத்திய அரசின் செயற்பாடுகளை விமர்சனம் செய்தாலும், விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள் உரிமைப் போராட்டங்களை ஆதரித்தாலும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில், தேசத்துரோக வழக்குப்பதிவு செய்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பெங்களூரு திஷா ரவி மீது ஏவப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும். இன்னும் சிலரையும் தேசத்துரோக வழக்கில் கைது செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.