ஞாயிற்றுக்கிழமை இரவு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவைச் சேர்ந்த ஜிங்கா சுதாகரா (46 வயது) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது பையில் இரண்டு சிறிய வாசலின் குப்பிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றைச் சோதனையிட்ட போது, 16 தங்க வெட்டுத் துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரிடம் இருந்து 19.14 லட்ச ரூபாய் மதிப்பில் 375 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1644 விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவரை சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, அவரது பையில் 9 ஹேர் ஜெல் குழல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்தக் குழல்கள் சற்று கனமாக இருக்கவே, சந்தேகமடைந்த சுங்கத்துறையினர் அவற்றை சோதனையிட்டனர். அப்போது அந்தக் குழல்களிலிருந்து தங்க பசை கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 14.16 லட்ச ரூபாய் மதிப்பிலான 250 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 33.3 லட்சம் ரூபாய் மதிப்பில் 635 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தத் தகவலை, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர், செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.