வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 17 நாட்களாக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 5 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றபின் அடுத்த பிரச்சினைகளை ஆலோசிக்கலாம் என்றும், வரும் 14-ம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்றும் விவசாயிகள் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தவிர்த்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. விவசாயிகள் கடந்த 17 நாட்களாக நடத்திவரும் போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் இறந்துள்ள செய்தி குறித்த இணைப்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும்’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “விவசாயச் சகோதரர்கள் கடந்த 17 நாட்களில் 11 பேர் உயிரிழந்த நிலையிலும் மோடி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மத்திய அரசு இன்னும் தொடர்ந்து தங்களுக்குப் பணம் வழங்குவோர் பக்கமே நின்று கொண்டிருக்கிறது. உணவு வழங்கும் விவசாயிகள் பக்கம் வரவில்லை. ராஜ தர்மம் உயர்ந்ததா அல்லது பிடிவாதம் உயர்ந்ததா என்பதை தேசம் தெரிந்துகொள்ள விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.