மத்திய அரசு கொண்டு வந்த இரு வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சைக்களுக்கு இடையே நிறைவேறிய நிலையில், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து கையொப்பம் இட வேண்டாம் என்று கோரி எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன, சந்திக்கவும் நேரம் கோரியுள்ளன. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, குறைந்தபட்ச ஆதார விலையை ரத்து செய்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. விவசாயிகளும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த இரு மசோதாக்களில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டால், அது சட்டமாகிவிடும். ஆதலால், குடியரசுத் தலைவர் கையொப்பமிட வேண்டாம் என எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. அதன்படி, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் , ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும், மசோதாவை ஏற்று கையொப்பமிடக் கூடாது என்று கோரியுள்ளன. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இரு மசோதாக்களும் சட்டமாகும் என்பதால், குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆளும் பாஜக தலைமையிலான அரசு மாநிலங்களவையில் இரு மசோதாக்களையும் நிறைவேற்றிய முறை என்பது ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இதனால் குடியரசுத் தலைவரைச் சந்தித்து நேரில் முறையிட நாளை எதிர்க்கட்சிகள் அனுமதி கோரியுள்ளன.
இதற்கிடையே இந்த மசோதா தொடர்பாக கவலை தெரிவித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சிரோன்மணி அகாலிதளம் கட்சி சார்பில் நிர்வாகிகள் சந்திக்கின்றனர். அப்போது இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று அகாலி தளம் கட்சியும் வலியுறுத்தவுள்ளது. காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வி, கோரிக்கை மனுவை எழுதி எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று என்று அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு மசோதாக்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிராக உருவாக்கப்பட்டவை, கார்ப்பரேட்களின் கைகளில் விவசாயிகளை அடிமையாகத் தரைவார்த்துவிடும் என்று கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.