ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்தை நடத்தினார் இந்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

கொரோனா தொற்று நிலவரம் காரணமாக, 2021ம் ஆண்டு ஹஜ் பயண நிகழ்வுகள், தேசிய மற்றும் சர்வதேச நெறிமுறைகளை சார்ந்து இருக்கும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். தில்லியில் இன்று நடந்த ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, 2021ம் ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் ஹஜ் புனித பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது தொடர்பான இறுதி முடிவு, கொரோனா தொற்று நேரத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு சவுதி அரேபியா அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் நெறிமுறைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் எனவும் தெரிவரித்தார்.

அடுத்தாண்டு ஹஜ் புனித பயணம் பற்றி சவுதி அரேபிய அரசு முடிவு எடுத்தபின், அதற்கான விண்ணப்ப நடைமுறைகளை இந்திய ஹஜ் குழு மற்றும் இதர இந்திய முகமைகள் முறைப்படி அறிவிக்கும் என அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். அடுத்தாண்டு ஹஜ் பயண திட்டத்தில், தேவையான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கலாம் என முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இந்தியா மற்றும் சவுதி அரேபியாவில், இருப்பிடம், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் இதர வசதிகள் போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கலாம் என அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று காரணமாக, புனித பயணிகளின் சுகாதாரம் மற்றும் நலம் ஆகியவை மத்திய அரசுக்கு மிக முக்கியம் என அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய முகமைகள் உறுதி செய்யும் என அவர் தெரிவித்தார். புனித பயணிகளின் சுகாதாரம் மற்றும் நலனை உறுதி செய்வதற்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும், ஹஜ் குழுவும் தொடங்கியுள்ளன.