கொரோனா வைரஸ் லாக்டவுன் நடைமுறைக்கு வந்ததில் இருந்து மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஒரு கோடிக்கும் மேலான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் சென்றுள்ளார்கள் என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
”கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால், புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றும் இடத்திலிருந்து சொந்த மாநிலத்துக்கு மிகப்பெரிய அளவில் நடந்தே சென்றார்கள். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தகவலின்படி, ஏறக்குறைய 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் லாக்டவுன் காலத்தில் நடந்தே சொந்த மாநிலம் சென்றுள்ளார்கள். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான இந்தக் காலகட்டத்தில் 81 ஆயிரத்து 385 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 29 ஆயிரத்து 415 பேர் உயிரிழந்தனர். ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டும் லாக்டவுன் காலத்தில் நடந்த விபத்துகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் அரசிடம் இல்லை. லாக்டவுன் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இதன்படி புலம்பெயர்
தொழிலாளர்களுக்கு இருப்பிடம், உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள், முறையான கவுன்சிலிங் போன்றவற்றை அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. சாலை மார்க்கமாக கால்நடையாக நடந்து சென்ற ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், காலணிகள்
போன்றவற்றை நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வழங்கியது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்காகத் தனி இடங்கள் உருவாக்கப்பட்டன. அவர்கள் சொந்த மாநிலம் செல்வதற்கு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டது”. இவ்வாறு வி.கே.சிங் தெரிவித்தார்.