புதுதில்லி, ஜூலை 03, 2020. நாடு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, 1989 மத்திய மோட்டார் வாகன விதிமுறைகளின் கீழ், தேசிய அனுமதி வழங்குவதற்கான திருத்தம் தொடர்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேசிய அனுமதி பரிபாலன முறையின் கீழ், சரக்கு வாகனப் போக்குவரத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் வாகனங்களையும் தடையின்றி இயக்கும் வகையில், அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் பயனாக, ‘’அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் அங்கீகாரம் மற்றும் அனுமதி விதிகள் 2020’’ என்ற பெயரில் வழங்கப்படும் புதிய விதிமுறைகள், ஜிஎஸ்ஆர் 425 (இ) 2020 ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு புறம், நாட்டிலுள்ள மாநிலங்களில் சுற்றுலாவை நீண்டகால அடிப்படையில் மேம்படுத்துவதுடன், மாநில அரசுகளின் வருவாயைப் பெருக்குவதற்கு இந்த விதிமுறைகள் உதவும். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அது தொடர்பானவர்களின் ஆலோசனைகளை அறிவதற்காக இது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஷயம், 39-வது போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இதற்கு, கூட்டத்தில் பங்கேற்ற மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், சுற்றுலா வாகனங்களை இயக்குபவர் யாராக இருந்தாலும், அவர்கள் ஆன்லைன் மூலம் ‘’ அகில இந்திய சுற்றுலா அங்கீகாரம் அனுமதி’’-க்கு விண்ணப்பிக்கலாம். வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் பொருத்தமானதாக உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்ட பின்னர், இந்த அங்கீகாரம்/ அனுமதி வழங்கப்படும். விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள், தேசிய அளவிலான கட்டணம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், இக்கட்டணம் செலுத்தப்படலாம். மேலும், அங்கீகாரம்/ அனுமதி மூன்று மாத காலத்துக்கு அல்லது அதன் மடங்காக, ஒரே சமயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் நீட்டிப்பு செல்லுபடியாகும் வகையில் இத்திட்டம் நீக்குப்போக்கு கொண்டதாக இருக்கும். நாட்டில் குறிப்பிட்ட பருவத்துக்கு மட்டும் சுற்றுலா மேற்கொள்ளப்படும் பகுதிகள், சுற்றுலா இயக்குபவர்களின் நிதித் திறன் ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு, இந்தத் திருத்தத்துக்கு வகை செயப்பட்டுள்ளது.
மத்திய தரவு தளம், அனைத்து அங்கீகாரம்/அனுமதிகளுக்கான கட்டணம் ஆகியவை இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். இந்தப்பதிவுகள் மூலம், சுற்றுலா இயக்கங்கள், முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள், சுற்றுலா மேம்பாடு, வருவாய் அதிகரிப்பு ஆகியவை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முடியும். தற்போது உள்ள அனுமதிகள் அனைத்தும் ஏற்கனவே உள்ள அதன் கால அளவுக்கு தொடர்ந்து செல்லுபடியாகும். கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில் நம் நாட்டின் பயணம் மற்றும் சுற்றுலா தொழில் பல மடங்கு வளர்ந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பங்களிப்பே இந்த வளர்ச்சிக்கு காரணமாகும். இவ்வகையில், நுகர்வோர் அனுபவம் மற்றும் உயர் எதிர்பார்ப்புக்கான போக்கு இதில் காணப்படுகிறது.