2021 சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் கருத்துக்கள்

தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ள சட்டமன்றப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அனைத்துத் தொகுதிகளிலும் (234) ஒரே நாளில் நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 2020 டிசம்பர் 22 இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் தலைமையிலான உயர்நிலைக் குழுவில் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் சமர்பிக்கப்பட்ட 17 முன்மொழிவுகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு கழுத்தை முறிக்கும் கடன் சுமையில் திணறி வருகின்றது.  இந்த நிலையில் மக்களின் வரிப்பணத்தில் தேர்தல் ஆதாயம் தேடும் கண்ணோட்டத்தில் அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களிலும் விளம்பரம் மற்றும் பிரச்சாரம் செய்ய பெரும் தொகை செலவிடப்படுகின்றது. இதன் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக ஒரு நிரந்தர வழிகாட்டு நெறிமுறை உருவாக்கப்படவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் நாளுக்கு முன்னர் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முன்பாக விளம்பரம் செய்வதை தடுக்கும் வகையில் நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தற்போதுள்ள தேர்தல் நடைமுறை வாக்காளர்களின் இயல்பான உணர்வை நேர்மையாக பிரதிபலிப்பதில்லை. மேலும் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆட்படும் நேர்வுகளும் ஏற்படுகின்றன. ஆகையால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் பெறும் முறையில் தேர்தல் நடைமுறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும். விகிதாச்சார தேர்தல் முறை குறித்து ஒரு பொது விவாதம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் வாக்காளர் பட்டியல் குறுந்தகடு மூலமாகவும் வழங்கப்படுகிறது. இதன் பயன்பாடு குறைந்து வருவதால் வாக்காளர் புகைப்படம் உள்ளிட்ட முழுமையான பட்டியல் பென்டிரைவ் மூலம் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்தியத் தேர்தல் ஆணையர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி – முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.