மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் 21-ம் நூற்றாண்டுக்கு அவசியமானவை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் முறை வழக்கம்போல் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது, குறைந்தபட்ச ஆதார விலையை ரத்து செய்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிஹாரில் 9 நெடுஞ்சாலைத் திட்டங்களையும், மாநிலத்தின் 45 கிராமங்களுக்கு இணையதள சேவையையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இரு வேளாண் மசோதாக்களும், 21-ம் நூற்றாண்டுக்கு அவசியமானவை. தற்போதுள்ள சூழலுக்கு வேளாண் துறையில் மாற்றம் தேவை, நம்முடைய விவசாயிகளுக்காக இந்த மசோதாவை நம்முடைய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த இரு மசோதாக்களை நிறைவேற்றி இருப்பதால், தற்போதுள்ள மண்டி முறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. அவை வழக்கம்போல் செயல்படும். மண்டி முறையில் எந்தவிதமான மாற்றமும் கொண்டுவரவில்லை. முன்பு இருந்ததைப் போலவே மண்டி முறை வழக்கம்போல் செயல்படும். இந்த மண்டிக்களை நவீனப்படுத்தும் வகையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுகிறது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், இனிமேல் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக விற்பனை செய்யலாம். விவசாயிகள் நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள், அவர்கள்தான் பயனடைந்தார்கள். இது மாற்றப்பட வேண்டியது அவசியம் என்பதால் மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா கொண்டுவந்தபின், பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு ஏற்கெனவே நல்ல விலையைப் பெற்று வருகிறார்கள். எந்த அரசும் இதுபோன்று விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை இவ்வளவு அதிகமாக வழங்கியதில்லை. கரோனா வைரஸ் காலத்தில் ஏராளமான லட்சம் டன் தானியங்கள் எடுக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. விவசாயிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.