3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய அரசு கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 வேளாண் மசோதாக்களைக் கொண்டுவந்து மத்திய அரசு நிறைவேற்றியது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்குக் கடந்த மாதம் 27-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டுச் சட்டமானது. இந்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. மனோஜ் ஜா, காங்கிரஸ் எம்.பி. டிஎன் பிரதாபன், திமுக எம்.பி. திருச்சி சிவா, மற்றும் ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்தச் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டதா, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா என்று மனுவில் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏஎஸ் போபன்னா, வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, அடுத்து வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.