385 அரசு மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்கள் ‘டிஸ்மிஸ்’: கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் கேரள அரசு அதிரடி

கொரோனா காலத்தில் பணிக்குவராமல், அதிகாரபூர்வமின்றி விடுப்பு எடுத்த 385 மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி கேரள அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். 1,100 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். போதுமான மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் இன்றி நிலைமை மோசமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அஞ்சி, பல மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, அந்த மருத்துவர்கள், செவிலியர்களை கணக்கெடுத்து கேரள அரசு பணியிலிருந்து நீக்கியுள்ளது. இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா விடுத்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கொரோனா காலத்தில் ஏராளமான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அதிகாரபூர்வமற்று விடுப்பு எடுத்திருந்தார்கள். அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை அளித்தும் பணிக்கு வரவில்லை. அதனால், அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரபூர்வமற்று விடுப்பில் இருந்த சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், மருத்து உதவியாளர்கள், ரேடியாகிராபர்கள் உள்ளிட்ட 432 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 385 அரசு மருத்துவர்கள் அடங்கும். இப்போது மாநிலம் எப்போதும் இல்லாத மருத்துவ அவசரநிலையை, சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை முழுவீச்சில் கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நேரத்தில் தேவையின்றியும், அதிகாரபூர்வ மற்றும் விடுப்பு எடுத்து பணியைச் செய்யாமல் இருப்பது ஒழுக்கக்கேடாகும், பணி செய்யும் மற்ற பணியாளர்களின் நேர்மையையும் இது குலைத்துவிடும். கொரோனா காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்களின் பணி மிகவும் முக்கியமானது, அவர்களின் சேவை அவசியம் தேவை. இதுபோல் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தொடர்ந்து நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிகாரபூர்மற்று விடுப்பு எடுத்துக்கொண்டு, பணிக்குவரக்கூறி பலமுறை எச்சரித்தும் வராத 46 மருத்துவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.