7ஜி.சிவா தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சப்தம்”. எழில் மிக்க ஒரு மலைக்கிராமத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்று இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் சிலர், கல்லூரிக்கு சற்று தொலைவில் காட்டுக்குள் இருக்கும் நூலகத்தின் மாடிக்கு சென்று கீழே வீழ்ந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த உடல்களை பரிசோதிக்கும்போது அவர்களது கை கால் முகம் அனைத்தும் கோணலாகவும் கையில் சைத்தானின் குறியீடும் இருக்கிறது. இதை கண்டுபிடிப்பதற்காக பேய்களைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணர் ஆதி அந்த கல்லூரிக்கு வருகிறார். பேய்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் அந்த நூலகம் ஒரு காலத்தில் தேவாலயமாக இருந்ததை கேள்விப்படுகிறார். தேவாலயம் எப்படி சைத்தான்களின் கூடாரமாக மாறியது? ஏன் அங்கு மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.? என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. இசையால் உடல் ஊனமுற்றவர்களை குணப்படுத்த முடியும் என்பதை கதையின் கருவாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். அடுத்தடுத்து வரும் காட்சிகள் அனைத்தும் மர்மமாகவும் அதிரடி திருப்பமாகவும் அமைந்திருக்கின்றன. மலைகளின் எழில் மிகுந்த அழகை திரையில் நம் கண்ணுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன். கதையின் கருவுக்கு தாயாக இருப்பது இசையமைப்பாளர் தமண்தான் என்று சொல்ல வேண்டும். பின்னணி இசையும் சப்தத்தின் அதிர்வும் படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. படத்தின் பின்பகுதியில்தான் சிம்ரனும் லைலாவும் தலையை காட்டுகிறார்கள். குறைவான நடிப்பிலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கருக்கு அதிக காட்சிகள் இல்லை. படத்தில் நகைச்சுவை இல்லாவிட்டாலும் கதை விறுவிறுப்பாக ஓடுகிறது. படம் முழுவதும் ஆதி வருகிறார் ஒரே முகபாவத்துடன். மருத்துவராக நடித்திருக்கும் லட்சுமி மேனன் பேயாக மாறும் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. (“பேய் வருவதை அறிவியல் கருவி கண்டு பிடிக்குமா? இயக்குநரே”).
“சப்தம்” திரைப்பட விமர்சனம்
