*கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣2⃣)

*மறைத்து_வைத்த_மர்மம்_என்ன?*

அந்த நாள் நிச்சயம் வரத் தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாக அறிவித்து விடலாமே! ஏன்
அறிவிக்க மறுக்கிறான்? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம். அந்த நாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு
ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க இது அவசியமானதாக
இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப் போகிறான். ஆயினும் எந்த நாளில், எந்த
மாதத்தில், எந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் என்பதை எவருமே அறிய முடியாது. மரணம் எப்போது வரும்
என்பது தெரியாததால் தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும்
நேரத்தை ஒருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் எல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான்.
மரணத்திற்குச் சற்று முன்பாக பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணி விடுவான். நல்லவனையும்,
கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய இயலாமல் போய்விடும். எல்லா மனிதனும் மரணத்திற்கு முதல்
நாள் வரை மகாக் கெட்டவனாக வாழ்ந்து விட்டு ஒரு நாள் மட்டும் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்ந்து விடுவான்.
நல்லவனையும்,கெட்டவனையும் பிரித்தறிய இந்த ஏற்பாடு அவசியம் என்பது போலவே மறுமை நாளைப் பற்றி
மறைத்து வைப்பதும் அவசியமே. நாம் வாழுகின்ற போதே அந்த நாள் வந்து விடுமோ என்ற அச்சம் தான்
சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை எல்லாம் செய்து விட்டுக் கடைசி
நேரத்தில் மட்டும் நல்லவனாக ஆகிவிடக் கூடாது என்பதற்கே அந்நாள் எது என்பதை இறைவன் இரகசியமாக
வைத்திருக் கின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியமுடியும். அந்த நேரம் வரக்கூடியதே.
ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது,
தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து
விடுவீர்!
(திருக்குர்ஆன் 20:15,16)
ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கேற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே அதை இரகசியமாக
வைத்திருக்கிறான். இதன் காரணமாகவே அந்த நாள் எதுவென்று அவன் அறிவிக்கவில்லை. அந்த நாள் எப்போது வரும்
என்பதை இறைவன் கூறாவிட்டா லும் அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி(ஸல்)
அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளார்கள். அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கி
யுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு உதவும் என்பதால் அவற்றைத் தெரிந்து
கொள்வோம்.
*மகளின் தயவில் தாய்*
பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய்
தனது மகளைச் சார்ந்து, மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த
முன்னறிவிப்புக்களில் ஒன்றாகும். ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50
*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*
மிகவும் பின் தங்கியவர்கள் ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவார்கள் என்பதும்
யுக முடிவு நாளுக்குரிய அடையாளங்களில் ஒன்றாகும்.
‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள்
மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின்
அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 50
இந்த நிலை இப்போது ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.
*குடிசைகள் கோபுரமாகும்*
அன்றைய மனிதன் பெரும்பாலும் குடிசைகளிலேயே வாழ்ந்தான். பணம் படைத்தவர்கள் ஓட்டு வீட்டில் வசித்தனர்.
உயரமாக அடுக்கு மாடிக் கட்டிடங்களை எழுப்பும் மூலப் பொருட்கள் அன்று கண்டு பிடிக்கப்படவில்லை.
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121
*விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
ஒளிவு மறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த விபச்சாரம் இன்று வெளிப்படையாக பகிரங்கமாக
நடக்கின்றது. அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை ஏற்படுத்துவதும், அன்னியப் பெண்களுடன் உறவு கொள்ளும்
போது ஆணுறை பயன்படுத்துங்கள்’ என்று பண்பாடு மிக்க இந்தியா போன்ற நாடுகளே செய்யும் விளம்பரமும்
விபச்சாரம் எந்த அளவுக்கு பெருகிப்போயுள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்தத் தீமைக்கு எதிராகப் போராடக்
கடமைப்பட்ட பல அரபு நாடுகளில் கூட இந்தத் தீமை தலை விரித்தாடும் போது அந்த நாள் மிகவும் நெருங்கி
விட்டதாகவே தோன்றுகிறது. மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கி
விட்டன. நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் உயர் ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு
வருவதும் மறுக்க முடியாத உண்மை. *நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*
*உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட
உங்களுக்குச் சிறந்ததாகும்* இப்பதிவை தாங்கள் இருக்கும் மற்ற வாட்ஸ்அப் தளங்களுக்கும் அனுப்பி அவர்களும்
அறிந்துக்கொள்ள உதவவும் இன்ஷாஅல்லாஹ்…“`
தொகுப்பு: அபுதாஹிர்
மயிலாடுதுறை