குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளிடமிருந்து குடியுரிமைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஜி வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
இதுவரை கண்டிராத மிகக் கடினமான சூழ்நிலையை நாடு கடந்து செல்கிறது. இந்த அபத்தமான நடவடிக்கையால் மத்திய அரசு நாட்டு மக்களை கேலி செய்கிறது. பாஜக அரசு ஏற்கனவே தன்னை நாட்டை ஆளத் தகுதியற்றது. திறமையற்றது என்பதை நிரூபித்துள்ளது. இந்த அரசு அனைத்து துறைகளிலும் மோசமான தோல்வியடைந்துள்ளது. மோசமான ஆட்சியும், தவறான நிர்வாகமும் இந்த அரசின் தனிச்சிறப்பு. வகுப்புவாத வெறுப்பைத் தூண்டி மதத்தின் பெயரால் குடிமக்களில் ஒரு பிரிவினரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாக உறுதியளித்து , பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்துவிட்டு அங்கு கோயில்களைக் கட்டுவதாக வாக்குறுதி அளித்துதான் இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. அவர்களின் கட்சி குண்டர்களை வீதிகளில் அழிச்சாட்டியம் புரிய அனுமதி வழங்கினார்கள். இவ்வளவு காலமாக பக்தி மந்திரமாக இருந்த ‘ஜெய்ஸ்ரீராம்’ இன்றைக்கு வெறித்தனமான சங்கி குண்டர்களால் ஒரு பயங்கரவாத முழக்கமாக மாற்றப்பட்டது. இதை சொல்லுமாறு இதர மதத்தவர்களை அவர்கள் கட்டாயப்படுத்தி தாக்குகிறார்கள். மறுப்பவர்கள் வீதிகளில் இரக்கமின்றி அடித்து கொல்லப்படுகிறார்கள். எரிபொருள் விலை அன்றாடம் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடுகின்றன. கோவிட் பெருந்தொற்று நோய் நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முயலவில்லை. மூச்சுத் திணறல் ஏற்படும் கோவிட் நோயாளிகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் வழங்குவதற்கான வசதிகள் இல்லை. பி.எம். கேர் நிதியில் வாங்கிய வென்டிலேட்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் அவை பழுதடைந்தவையாக உள்ளன. போதுமான தடுப்பூசி கிடைக்கவில்லை. தகனத்திற்கு வசதிகள் இல்லாததால் சடலங்கள் ஆறுகளில் வீசப்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பங்களாதேஷை விட இந்தியா பின்தங்கியிருக்கிறது. வேலையின்மை உச்ச நிலையை அடைந்துள்ளது. ஏழை ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து கூட உதவியை பெற வேண்டிய இழி நிலைக்கு பாஜக அரசு நாட்டை கொண்டு வந்துள்ளது. நாட்டின் உண்மையான குடிமக்கள் தங்கள் வாழ்க்கையில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு, பெருந்தொற்று நோயிலிருந்து தப்பிக்க போராடும் போது, மோடி பழமொழியில் கூறப்படும் நீரோவைப் போல வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தாமல் சில மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் அரசு மும்முரமாக உள்ளது, இது, அரசாங்கத்தின் தோல்வியை மூடிமறைப்பதற்காக பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் மிகவும் அவமானகரமானது, கண்டிக்கத்தக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் வீணான நடவடிக்கையாகும். மோடியும், பா.ஜ.க அரசும் நாட்டிற்கு பெரும் சுமையாக மாறிவிட்டனர். இந்த சூழலில் தங்களின் தோல்வியை மறைக்க குடியுரிமை போன்ற சர்ச்சைக்குரிய விசயங்களை தூண்டும் மத்திய அரசின் அபத்தமான நடவடிக்கைகளுக்கு எதிராக, எதிர்வரும் ஜூன் 01 ஆம் தேதி நாடு தழுவிய பரப்புரையை நடத்த எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவுச் செய்துள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஏந்தி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு எம்.கே.பைஜி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.