லட்சத்தீவை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரவார்க்க முயல்வாதாக அத்தீவு மக்கள் குமுறல்

‘‘லட்சத்தீவிலிருந்து எங்களை முற்றிலுமாக அகற்றிவிட்டு, அதை மொத்தமாக கார்ப்பரேட்களுக்குத் தாரைவார்க்க முயல்கிறார்கள். அதற்காகவே புதிது புதிதாக விதிமுறைகளைக் கொண்டுவந்து எங்களை அச்சுறுத்துகிறார்கள். இதற்கெல்லாம் சூத்ரதாரியாக, இங்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகி பிரஃபுல் கே பட்டேல் செயல்படுகிறார்’’ என்று கொந்தளிக்கிறார்கள் லட்சத்தீவு மக்கள்.

அரபிக்கடலில் அமைந்துள்ளது இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு. 36 தீவுகளைக் கொண்ட லட்சத்தீவுகள் கூட்டத்தில், 11 தீவுகளில் சுமார் 76,000 மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். லட்சத்தீவின் நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மா காலமானதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த பிரஃபுல் கே பட்டேல் கடந்த டிசம்பர் 5-ம் தேதி நியமிக்கப்பட்டார். வழக்கமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நிர்வாகியாக நியமிக்கப்படும் நிலையில், பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாக அறியப்படும் அரசியல்வாதியான பிரஃபுல் கே பட்டேல் நிர்வாகியாக நியமிக்கப்பட்டது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிர்ச்சிக்கு காரணமும் உள்ளது. .

புதிய நிர்வாகியான பிரஃபுல் கே பட்டேல், லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளார். அதன்படி மாட்டுக்கறிக்குத் தடை, மக்களின் நிலங்களை அரசு எப்போது வேண்டுமானாலும் கையகப்படுத்தலாம், அவர்களை வேறு பகுதியில் குடியிருக்க வைக்கலாம், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இறைச்சி உணவுக்குத் தடை, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் ஊராட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது, மாவட்டப் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அதிகாரம் குறைப்பு, மதுவே இல்லாத லட்சத்தீவில் மது பார்கள் திறக்கலாம் என்பது போன்ற பல புதிய வரைவுச் சட்டங் களைக் கொண்டுவந்துள்ளார். தீவில் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே இச்சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“வாழ்வியல் தகர்க்கப்படும்!’’

லட்சத்தீவைச் சேர்ந்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் நாஸிஹ் உஸ்தாத் கூறியதாவது.
‘‘லட்சத்தீவு மூன்று கிலோமீட்டர் நீளம் மட்டுமே கொண்டது. இங்கு வளர்ச்சி எனக் கூறிக் கொண்டு இதுபோன்ற புதிய திட்டங்களைச் செயல்படுத்தினால், நாங்கள் வாழவே முடியாது. இப்போது இருக்கும் மூன்றரை மீட்டர் அகலமுள்ள சாலையை ஐந்து மீட்டராக அகலப்படுத்துவதாகக் கூறியுள்ளார்கள். அப்படி அகலப்படுத்தினால், நிறைய வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் நிலை ஏற்படும். இவ்வளவு அகலமான சாலைகள் இங்கு தேவையே இல்லை.

எதிர்காலத்தில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, குண்டாஸ் ஆக்ட் கொண்டு வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். தீவுக்கு வெளியே போதைப்பொருள்கள் பிடித்ததை அவர்கள் காரணமாகக் காட்டுகிறார்கள். அரபிக்கடலில் கோஸ்டல், நேவி ஆகியவை இருக்கும்போது, எப்படி போதைப்பொருள் வந்தது? தீவின் வெளிப்பகுதியில் போதைப்பொருள் பிடிக்கப் பட்டால், அதற்கு தீவில் உள்ளவர்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?

மாட்டுக்கறி பயன்படுத்தத் தடை கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். எங்கள் தீவின் பிரதான உணவே மாட்டுக்கறிதான். என் அப்பா காலத்திலேயே பள்ளிகளில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் இறைச்சி உணவு கொடுப்பார்கள். அதை இனி பள்ளிகளில் கொடுக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்கள். மாணவர்கள் குறைவாக உள்ளதாகக் காரணம் காட்டி, பள்ளிகளை மூட நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நிதி இல்லை என்று ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குகிறார்கள். கடலோரப் பாதுகாப்புக்காக 300 போலீஸார் இருந்தார்கள். அவர்களையும் பணியிலிருந்து நீக்கியுள்ளார்கள்.

எல்லா மாநிலங்களிலும் கடற்கரை, அரசுக்குச் சொந்தமான இடமாகத்தான் இருக்கும். அதில்தான் மீனவர்கள் மீன்பிடிப் பொருள்களை வைப்பார்கள். இங்குள்ள கடற்கரையில் மீனவர்கள் தங்கள் படகுகளையும், மீன்பிடித் தளவாடங்களையும் பாதுகாக்க கூடாரமும் அமைத்திருந்தார்கள். ஆக்கிரமித்துக் கட்டியதாக மீன்பிடிக் கூடாரங்களை அகற்றிவிட்டார்கள்.

சாதாரண முதலுதவிக்கான மருத்துவ வசதி மட்டுமே இங்குள்ளன. மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்ல மூன்று ஏர் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதற்கு முன்பு மருத்துவமனையில் உள்ளவர்கள் மெடிக்கல் டைரக்டருக்கு மெசேஜ் அனுப்பினால், உடனே ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கொச்சி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளி அழைத்துச் செல்லப்படுவார். ஆனால், புதிய விதிப்படி மெடிக்கல் டைரக்டருக்கு மெசேஜ் அனுப்பினால், அவர் நான்கு பேர் கொண்ட மருத்துவக்குழுவுக்குத் தகவல் அனுப்புவார். அக்குழுவிடம் அனுமதி பெற்ற பிறகே ஹெலிகாப்டர் அனுப்புவார்கள். இங்கு அதிகமானோர் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படுவது வாடிக்கை. புதிய கமிட்டியிடம் ஏர் ஆம்புலன்ஸுக்காக அனுமதி பெறுவதற்குள், நோயாளி மரணிக்கும் நிலை ஏற்படும்..

மக்களின் நிலங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். இனி வரி செலுத்தத் தாமதமானால், லட்சக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும் எனப் புதிய சட்டம் கொண்டுவருகிறார்கள். இதற்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் மட்டும் வரக்கூடிய, மக்கள் வசிக்காத பங்காரம் தீவில் மட்டும் மது விற்பனை இருந்தது. இப்போது மக்கள் வசிக்கும் கவரத்தி, மினிக்காய், கடமத் ஆகிய மூன்று தீவுகளிலும் மது விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளார்கள். இப்போது வரைவுச் சட்டம்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால், லட்சத்தீவின் வாழ்வியல், பாரம்பர்யம், கலாசாரம் தகர்க்கப்படும்’’ என்றார்.

லட்சத்தீவு மக்கள் இதுவரை போக்குவரத்து தொடர்புக்காகப் பயன்படுத்திய கேரள மாநிலத்தின் பேப்பூர் துறைமுகத்தை இனி பயன்படுத்த வேண்டாம் என்றும், பா.ஜ.க ஆளும் கர்நாடகா மாநிலத்தின் மங்களூர் துறைமுகத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் ஓர் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்கு, கேரளத்தை ஆளும் சி.பி.எம் அரசு கடும் எதிர்வினையாற்றியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் லட்சத்தீவுப் பிரச்னை குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், லட்சத்தீவுப் பிரச்னையைக் கையிலெடுத்து, அதற்கு எதிர் வினையாற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

“கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் முயற்சி!”

திருவனந்தபுரம் மாவட்ட சி.பி.எம் செயலாளர் அனாவூர் நாகப்பனிடம் இதுகுறித்துப் கூறியபோது, ‘‘கார்ப்ப ரேட்டுகளுக்கு லட்சத்தீவைத் தாரைவார்க்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்த நடவடிக்கைகள். லட்சத்தீவில் மீன்பிடித் தொழிலும், தேங்காய் உற்பத்தியும்தான் உள்ளன. மற்றபடி எல்லாப் பொருள்களும் பேப்பூர் துறைமுகம் மூலமாகத்தான் லட்சத்தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த உறவைத் துண்டிக்கும் விதமாக, மங்களூர் துறைமுகம் மூலம் இனி பொருள்களைக் கொண்டு செல்ல வேண்டும் எனப் புதிய நிர்வாகி உத்தரவிட்டுள்ளார்.

லட்சத்தீவில் பெரும்பாலான மக்கள் மலையாள மொழி பேசுபவர்கள். எனவே, அவர் களுக்கு பேப்பூர் துறைமுகம் அனைத்து விஷயங் களுக்கும் வசதியாக இருக்கும். கேரளத்துடன் அவர்கள் தொடர்பில் இருக்கக் கூடாது என்பதற்காகவே இப்படியொரு தீர்மானம் எடுத்துள்ளார்கள்’’ என்று கொந்தளித்தார்.

“மக்களைத் திசைதிருப்பும் முயற்சி!”

லட்சத்தீவு வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை பிரஃபுல் கே பட்டேல் எடுத்துவருவதாக கேரள பா.ஜ.க கூறிவருகிறது. கேரள மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் எம்.டி.ரமேஷ் கூறியபோது,  ‘‘வளர்ச்சிக்காக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுவது நாட்டில் எல்லா இடங்களிலும் நடப்பதுதான். அதுதான் லட்சத்தீவிலும் நடந்துள்ளது. ஏற்கெனவே அங்கு சுற்றுலாவைக் கருத்தில்கொண்டு சில ஹோட்டல்களில் மது அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போதும் சுற்றுலா பயணிகளுக் காகத்தான் மது விற்பனை அனுமதிக்கப்படுகிறது. அது சுற்றுலா வளர்ச்சியின் ஒரு பகுதி. .

டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்படிதான் பள்ளி மாணவர்களுக்கு இறைச்சி உணவு வழங்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. லட்சத் தீவில் மொத்தமாக இறைச்சிக்குத் தடை விதிக்கப்படவில்லை.

பேப்பூர் துறைமுகத்தில் டெவலப்மென்ட் இல்லாததால், அத்துறைமுகம் வழியாக சரக்குப் போக்குவரத்து செய்வதில் சிரமம் உள்ளதாக லட்சத்தீவின் டிரான்ஸ் போர்ட் கமிட்டி தீர்மானித்துள்ளது. பேப்பூர் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என கேரள அரசை லட்சத்தீவு டிரான்ஸ்போர்ட் கமிட்டி பல காலமாகக் கேட்டு வருகிறது. மாநில அரசிடம் பணம் இல்லாமல் இருந்தால், நாங்கள் பணம் தருகிறோம் எனவும் லட்சத்தீவு கூறிவந்தது.

கடந்த பத்து ஆண்டுகளாக மாநில அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. எனவே, மங்களூர் துறைமுகம் மூலம் சரக்கு போக்குவரத்து நடத்துவது என லட்சத்தீவு டிரான்ஸ்போர்ட் கமிட்டிதான் தீர்மானித்துள்ளது. கேரளத்தில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இங்குள்ள மக்களைத் திசைதிருப்பு வதற்காக சி.பி.எம் அரசு லட்சத்தீவுப் பிரச்னை யைக் கையிலெடுத்துள்ளது’’ என்றார்.

வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்காகத்தான் என்றால், மக்கள் விரும்பாத வகையில்; அவர்களை அச்சமூட்டும் வகையில் ஏன் அவை செயல்படுத்தப்படுகின்றன?