நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடிதமெழுதிய ஸ்டாலினை வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி

சிபிஎஸ்இ என்கிற மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடப்பு ஆண்டு பொதுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, “மாணவர் உடல் நலன் மற்றும் உயிர் பாதுகாப்பில் ஒரு துளியும் சமரசம் செய்து கொள்ள முடியாது” என அறிவித்தார். இதனையொட்டி பல மாநிலங்களிலும் 12ஆம் வகுப்புக்கான ஆண்டு பொதுத் தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. உயர் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு நீட் தேர்வு உட்பட பல நுழைவு மற்றும் திறன் அறியும் தேர்வுகள் நடத்தும் சூழலில் தமிழ்நாடு மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பாதுகாக்கப்படுவது முன்னுரிமை பெற்றது. இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்கான அரசின் உயர் மட்டக்குழு என பல்வேறு நிலைகளிலும் ஆலோசித்து, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்து அறிவித்துள்ளதும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிட குழு அமைத்து பரிந்துரை கேட்டிருப்பதும் நல்ல அணுகுமுறையாகும். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு உட்பட உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி வலியுறுத்தி இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன், முதலமைச்சர் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பொருத்தமான உத்தரவுகளை வெளியிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.