வரும் ஜூலை (2021) முதல் அடுத்த ஆண்டு (2022) ஜூன் மாதம் வரையிலான காலத்தில் விளையும்
14 வகையான வேளாண் விளை பொருட்களுக்கு, ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவித்துள்ளது. இதன்படி சாதாரண ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.72 சேர்த்து ரூ.1940 என்றும் முதல் தர நெல் ரூ.1960 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் என உணவு தானியங்கள், பருப்புவகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த விவசாய விளை பொருட்களில் அதிக பட்சம் 25 சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. இது தவிர 75 சதவீத விவசாய விளைபொருட்கள் தனியார் சந்தைகளில் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் தொடங்கி, இடுபொருள்கள் மற்றும் விதைகள், உரங்கள் என அனைத்து விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் விலைகளை கணக்கில் கொள்ளாமல், தனியார்துறை வணிக நிறுவனங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலைகளை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ளது. விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுவதை சட்டபூர்வ உரிமையாக்க வேண்டும் எனவும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைந்த தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைப்படி, விவசாய விளைபொருட்களின் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக போராடி வருவதை ஒன்றிய அரசு ஒரு துளியும் கருத்தில் கொள்ளவில்லை. வழக்கம் போல் சொற்பத் தொகை சேர்த்து அறிவித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இதில் 50 முதல் 85 சதவீதம் வரை விவசாயிகள் லாபம் பெறுவர் என்பது அப்பட்டமான மோசடியாகும். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக உயர்த்தித் தருவதாக உறுதியளித்த பாஜக ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றும் திசைவழியிலேயே தொடர்ந்து செயல்படுகிறது. விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களின் மூலம் விவசாய நிலங்களை பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பலி கொடுப்பதில் முனைப்பு காட்டும் ஒன்றிய அரசு, நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு எந்த வகையிலும் உதவாது, அவர்களை தற்கொலைச் சாவுகளில் இருந்து காப்பாற்றாது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.