அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளிக்க சமூக வலைதளங்கள் மூலம் ரூ.16 கோடி திரட்டி மகன் உயிரை காப்பாற்றிய பெற்றோர்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. இவர் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி ரூபல் குப்தா. இவர்களுக்கு அயான்ஷ் (3) என்ற மகன் உள்ளான். அயான்ஷ் பிறந்தது முதலே ஸ்பைனல் மஸ்குலர் அட்ரஃபி (எஸ்எம்ஏ) என்ற முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப் பட்டான். செகந்திராபாத்தில் உள்ள ரெயின்போ குழந்தைகள் நல தனியார் மருத்துவமனையில் அயான்ஷ்க்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இறுதியில் ஜொல்ஜென்ஸ்மா (ZOLGENSMA) எனப்படும் மருந்தை ஊசி மூலம் இரு கைகளில் செலுத்தினால் மட்டுமே அயான்ஷ் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த மருந்து அமெரிக்காவிலிருந்து தான் வரவழைக்க முடியும். இதன் விலை ரூ.16 கோடி. இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாயினர். ஆனால், எப்படியாவது மகனை காப்பாற்ற சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்ட முடிவு செய்தனர். அதன்பேரில் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி தனது மகனுக்கு ஏற்பட்டுள்ள வியாதி குறித்தும், இதற்காகும் செலவு குறித்தும் சமூக வலைதளத்தில் விளம்பர படுத்தினர். அதன் பின்னர் விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என 65 ஆயிரம் பேர் நிதி வழங்கினர். இதனால் ரூ.16 கோடி சேர்ந்தது. அந்த பணத்தை செலுத்தியதில், உலகிலேயே விலை உயர்ந்த அந்த மருந்து அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு கடந்த 8-ம் தேதி வந்தடைந்தது.மருந்து இறக்குமதிக்கான ரூ.6 கோடி வரியை மத்திய அரசு ரத்து செய்தது. கடந்த 9-ம் தேதி புதன் கிழமை சிறுவன் அயான்ஷுக்கு மருத்துவர்கள் ரூ.16 கோடி மதிப்புள்ள மருந்தை இரு கைகளிலும் செலுத்தினர். சில மணி நேர கண்காணிப்புக்குப் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மகனின் உயிரை காப்பாற்றிவிட்டோம் என்ற நம்பிக்கையுடன் அயான்ஷை அழைத் துக் கொண்டு பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் மிகவும் கவனமாக அயான்ஷை பார்த்துக் கொள்வதாக அவனது தந்தை யோகேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.