கிருஷ்ணகிரி அருகே, 16 லட்சம் ரூபாய், 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தாசரப்பள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், (வயது60) விவசாயி. இவருக்கு லோகேஷ்குமார், (32 )என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். லோகேஷ்குமார், தந்தையுடன் கோபித்து கொண்டு, எட்டு ஆண்டுகளாக ஓசூரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் புவனேஸ்வரி,( 28,) விபத்தில் கணவன் இறந்து விட்ட நிலையில், தந்தை வீட்டில் வசித்து வருகிறார். புவனேஸ்வரி, வீட்டின் முன்புறம் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், போலீசில் கோவிந்தராஜ் அளித்த புகாரில், கடந்த 12ம் தேதி, பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த புவனேஸ்வரியிடம், முகத்தில் கர்சீப் கட்டிய இருவர் பைக்கில் வந்து, கூல்டிரிங்ஸ் கேட்டுள்ளனர். வீட்டிற்குள் சென்று கூல்டிரிங்ஸ் எடுத்த புவனேஸ்வரி மீது மயக்க பொடியை துாவியவுடன் மயங்கி விழுந்துள்ளார். அப்போது, வீட்டின் பீரோவை திறந்து, 20.5 சவரன் தங்க நகை, அரிசி, ராகி தொட்டிகளில் இருந்த, 16 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நிலம் விற்ற பணம், அதை வைக்கும் இடம் ஆகிய விபரங்கள், என் மகன் லோகேஷ்குமாருக்கு மட்டுமே தெரியும். அவர் ஆட்களை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். புவனேஸ்வரியிடம் போலீசார் விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து உள்ளார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.