தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதி – அரசுக்கு அறிவுறுத்தும் மூத்த பத்திரிக்கையாளர் டி. ஜெ. நவநீதன்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு  செய்தி துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்களின் கவனத்திற்கு: கொரோனாவைரஸ் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரைப்பட தொழில், குறிப்பாக திரையரங்குகள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்குகள் விரைவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 50 சதவீதத்திற்கு மேல் பார்வையாளர்களை அரசு அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே. மேலும், மூன்றாம் அலை விரைவில் தாக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் பல திரையரங்குகள் திறக்கப்படாமல் முடங்கும் அபாயம் உள்ளது. இவற்றை தடுத்து, திரைத்தொழிலை பாதுகாப்பதோடு, மக்களையும் கொரோனா தொற்றில் இருந்து காக்கும் வகையில் ஒரு யோசனை.தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே திரையரங்குகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் 100 சதவீதம் வரை பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் அரசு அறிவிக்கலாம். முதல் தவணை தடுப்பூசி பெற்றவர்களுக்காக தனி பகுதியை ஒதுக்கி அவர்களை ஒரு இருக்கை இடைவெளியிலும், இரண்டு தவணை தடுப்பு மருந்தையும் பெற்றவர்களுக்காக தனி பகுதியை ஒதுக்கி அவர்களை அருகருகிலும் அமர செய்யலாம்.
தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை பார்வையாளர்கள் திரையரங்கிற்கு கொண்டு வர வேண்டும். இதை சரிபார்த்து அவர்களை அரங்கிற்குள் அனுப்புவதற்கு தியேட்டர் ஊழியர்களுக்கு உதவ தன்னார்வலர்களையோ அல்லது திரைப்பட ரசிகர்களையோ அமர்த்தலாம். இது தவிர ஒரு திரையரங்கிற்கு இரு காவலர்களையும் அரசு அனுப்பலாம். இதன் மூலம், திரையரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பழைய நிலைமைக்கு வருவதோடு, திரைப்பட ரசிகர்களான தமிழக மக்கள் தடுப்பூசி பெற முன் வரவும் ஊக்கமாக அமையும். இன்னும் சில மாதங்களில் தீபாவளி திருநாள் வரவிருப்பதாலும், பெரிய படங்கள் ரிலீசாக இருப்பதாலும், மேற்கண்டவாறு செய்யும் பட்சத்தில் மூன்றாவது அலை வந்தால் கூட, திரையரங்குகளையும், ரசிகர்களையும் அது பாதிக்காது என்று நம்பலாம்.