சென்னையில் 28 நாட்களில் ஆக்டிவ் கேஸ்கள் 49,236-ல் இருந்து 2,262-க்கு குறைந்துள்ளது. கொரோனாவை சென்னை வென்று காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு வழியாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 36,000-ஐ கடந்து அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது 9,000-க்கு கீழ் குறைந்து ஆறுதல் அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகவே கொரோனா வைரஸ் குறைந்துள்ளது.. அதுவும் தலைநகர் சென்னையில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் பாதிப்பு மற்ற மாவட்ட மக்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்தது என்றால் அது மிகையல்ல. சென்னையில் ஒரு கட்டத்தில் 6,000-ஐ கடந்து சென்ற கொரோனா தற்போது வெறும் 500-க்குள் குறைந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். சென்னையில் தற்போது 2,262 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே இருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார் கொரோனா வைரஸ் தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த். கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி சென்னையில் இருந்த ஆக்டிவ் கேஸ்கள் 2,277 ஆகும். மே மாதம் 22-ம் தேதி ஆக்டிவ் கேஸ்கள் 49,236 என்று உச்சம் தொட்டது. ஆனால் இன்று சென்னையில் உள்ள ஆக்டிவ் கேஸ்கள் 2,262 மட்டுமே. சென்னையில் மார்ச் 17-ம் தேதி முதல் முதல் மே 22-ம் தேதி வரை கொரோனா உச்சத்தை அடைய 67 நாட்கள் ஆனது. இன்று ஆக்டிவ் கேஸ்கள் 2,262 ஆக குறைவதற்கு மே 22-ல் இருந்து 28 நாட்களாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் எந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.