100 நபர்களுடன் திரைப்படம் தயாரிக்க அனுமதியளித்த முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்தது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”  கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் படத்திற்கு பிந்தைய வேலைகளை துவக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை  வைத்து திரை உலகை காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வரிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து மனு கொடுத்தோம். அதன் முதல்படியாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,  இன்று 100 நபர்களுக்குள் குழுவினரை வைத்து படப்பிடிப்பு துவக்கலாம். படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளையும் நடத்தலாம்” என ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு எங்களது கோடானுகோடி நன்றிகள். தமிழக அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கடைபிடித்து சானிடைசரை உபயோகப்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்திட வேண்டுமாய் தயாரிப்பாளர்களையும் படக்குழுவினரையும் கேட்டுக்கொள்கிறோம்.மற்ற கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கையோடு மீண்டும் படப்பிடிப்புகளை நம்பிக்கையோடு துவக்குவோம். என்று தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொடர்பு: விஜயமுரளி சத்யா