சிஏஏ விவகாரத்தில் தொடர் ஏமாற்றமே நீடிக்கிறது!* தமிழக ஆளுநர் உரை தொடர்பான எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் அறிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையடுத்து, 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த  மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கான அறிவிப்புகள், மாநில சுயாட்சி என்கிற இலக்கை எட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. மேலும், மாநில அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை என்கிற அறிவிப்பும், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அறிவிப்பும் தமிழக இளைஞர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளன. மேலும், லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கை, விண்ணப்பித்து 15 நாட்களில் குடும்ப அட்டை, மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும் அறிவிப்பு ஆகியவை வரவேற்கத்தக்கது.

மேலும், கல்வி முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு மற்றும் வீட்டுவசதிகளை சிறுபான்மையினர் பெற சச்சார் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பையும், அதேபோல், தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்கிற அறிவிப்பையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. அதேவேளையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க, தேவையான சட்டங்களை நிறைவேற்றி அத்தகைய சட்டங்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்கிற விசயத்தில் தமிழக அரசு தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க  வேண்டும்.  
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கத் தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை தமிழக அரசு வற்புறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேவேளையில் அரசமைப்பு விரோத, முஸ்லிம்களை புறக்கணிக்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பான எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. இந்த விவகாரத்தில் கடந்த ஆட்சியில் தொடர்ந்த ஏமாற்றமே இந்த ஆட்சியிலும் தொடர்கிறது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.