பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆளுநர் உரையாற்றியுள்ளார். பத்தாண்டு காலம் சரிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை மீட்போம் என் முழக்கத்தை அரசின் உறுதியான கொள்கையாக ஆளுநர் அறிவித்துள்ளார். கடுமையாக கடன்சுமையிலும், நிதி நெருக்கடியிலும் தமிழ்நாடு தத்தளிக்க என்ன காரணம் என்பதை மக்களுக்கு விளக்கிடும் வகையில் ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடுவது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடும், தமிழ் நாட்டில் வாழ்வோரும் தலை நிமிர்ந்து, சுய மரியாதையுடன் வாழ்ந்திட சமூக நீதி, பாலின சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதி வழங்க அரசு உறுதி பூண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவின் துணையோடு முதலமைச்சர் நடவடிக்கைகளை முன்னெடுப்பது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் செயலாகும். கலைஞர் காலத்தில் தொடங்கிய உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் ஊட்டுவது விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும் என்பது மாணவர்களின் உயர் கல்வி உரிமைகள் பாதுகாக்கும் முயற்சியாகும். பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக அமைத்திருக்கும் வேளாண்துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்பதன் மூலம் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுகிறது. கொரோனா நோய்த்தொற்று தாக்குதலை எதிர் கொள்ள போதுமான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என விமர்சித்துள்ள ஆளுநர் உரையின் உணர்வை ஒன்றிய அரசு மதித்து, தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்துகளும், இதர உதவிகளும் வழங்கிட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் உரை வலியுறுத்தியுள்ளது. இதனை பிரதமர் உடனடியாக ஏற்க வேண்டும். தமிழ் மொழி பயன்பாட்டை விரிவுபடுத்த மாநிலத்தில் செயல்படும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் தமிழ் மொழி, இணை மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் என கோரியிருப்பது மிகச் சரியானது தமிழ்நாட்டு எல்லைக்குக்குள் உள்ள ஒன்றிய அரசுப் நிறுவனங்களில் தமிழ்நாட்டு பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பது தமிழ்நாட்டு மக்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கும், விரிவுபடுத்தும். கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை வீச்சை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கும். ஊழல் புகார்கள் மீதான விசாரணைகளை விரைவு படுத்துவதுடன், மக்கள் பிரதிநிதிகள், உயர்நிலை அலுவலர்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்புக்கு உரிய அதிகாரம் வழங்குவது பொதுவாழ்வில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கையாகும். திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்களில் சிறப்பு கவனம் செலுத்தியிருப்பது உயர்ந்த பண்பாட்டின் வெளிப்பாடாகும். மாவட்டம் தோறும் உழைக்கும் பெண்களுக்கான விடுதிகள் அமைப்பது அவர்களின் பாதுகாப்புக்கு உதவும். இதன் தொடர்ச்சியாக பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார் பெட்டிகள் வைப்பது உள்ளக விசாரணை குழுக்கள் அமைப்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். உயர்மதிப்பு பண நீக்கம், ஜிஎஸ்டி வரி, கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புக்கான நாடு முடக்கம் போன்ற ஒன்றிய அரசின் முன்யோசனை இல்லாத நடவடிக்கைகளால் நொடிந்து போயுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்கள் விரைந்து முன்னேற உதவும் திட்டங்களை ஆளுநர் உரை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகரத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளச் சேதத்தை தடுக்க, மேலாண்மை குழு அமைப்பது பாராட்டத்தக்கது. நாட்டின் முதன்மையான உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டில் தகவல் தொழிற்நுட்பப் பிரிவு, வாகன உற்பத்தி உட்பட ஏராளமான தொழில் பிரிவுகள் உள்ளன. இதில் பணியாற்றும் தொழிலாளர் நலன்கள் நல வாரியங்களை தாண்டியும் இருப்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு நிறைவேற்றிய விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை எதிர்த்து ஆறுமாதங்களை கடந்து, தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடப்புக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது வரவேற்கத்தக்கது.
இருள் மண்டி கிடந்த தமிழகத்தில் விடியலின் வெளிச்ச ஒளிக்கீற்றாக ஆளுநர் உரை அமைந்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.