எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல்!: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன் திடுக் தகவல்.

எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களை குறிவைத்து பல லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றது வடமாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களில் நூதன முறையில் அரங்கேறிய கொள்ளை வங்கி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாநிலம் முழுவதும் 21 இடங்களில் கொள்ளை நடந்திருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் நடந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவினர் அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்தனர். வடமாநிலத்திலும் இதேபாணியில் கொள்ளை நடந்திருப்பதால் அதில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாட்டிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அமீர் ஹர்ஸ் என்ற 37 வயது கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானாவை சேர்ந்த அவனது பின்னணியில் உள்ள மற்றவர்களை பிடிப்பதற்காக தனிப்படையினர் அங்கேயே முகாமிட்டுள்ளனர். அமீர் ஹர்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் கொள்ளையடித்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் 5 குழுக்களை சேர்ந்த 10 பேர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளான். அவர்கள் தலா 2 பேர் வீதம் தனித்தனியாக பிரிந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
அமீரும் அவனது கூட்டாளியும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் சுற்றிவந்து எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் செலுத்தும் வசதி உள்ள சி.டி.எம். இயந்திரங்கள் இருக்கும் ஏ.டி.எம். மையங்களை தேர்வு செய்ததாகவும், சி.டி.எம். இயந்திரத்தின் பணம் வரும் இடத்தில் உள்ள ஷட்டரை 20 வினாடிகள் பிடித்தும் சென்சாரை மறைத்தும் 100க்கும் மேற்பட்ட தடவைகள் பணம் எடுத்ததாக தெரிவித்துள்ளான். தங்களது கொள்ளை திட்டத்தை பெரும்பாலும் நள்ளிரவு நேரத்தில் செயல்படுத்தியதாக கூறியுள்ள அவன், இரவு 11:30 மணி முதல் 12:30 மணிக்குள்ளாக கொள்ளையை அரங்கேற்றிவிட்டு தப்பியதாக தெரிவித்துள்ளான். அவனிடம் நான்கரை லட்சம் ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர். அமீர் ஹர்ஷை டெல்லி வழியாக சென்னை அழைத்து வந்து விசாரணையை தொடர போலீசார் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.