இந்திய அரசு மக்கள் உயிரோடு விளையாடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய கம்யூ.

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூன்றாம் அலை பரவல் விரைவில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். உருமாறிய கொரோனா, டெல்டா பிளஸ் கரும்பூஞ்சை போன்ற புதிய நோய்களும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே மக்கள் உயிர்காக்கும் ஒரே வழியாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் பாஜக ஒன்றிய அரசு ஆரம்பத்தில் இருந்தே பாரபட்சம் காட்டி வருகிறது. அரசியல் உறுதியற்ற முந்தைய அரச ஒன்றிய அரசின் வஞ்சனைப் போக்கிற்கு துணை போனது. இதனால் படுமோசமான அவலநிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது. இந்த நெருக்கடி சூழ்ந்த நிலையில் திமுக தலைமையில் அமைந்த புதிய அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து நோய்த் தொற்றுப் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் நோய்த் தடுப்பு உடையணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியம் கூறி மருத்துவப் பணிகளை வேகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதை மக்களியக்கமாக்கி வருகிறது. இதற்கு உதவ வேண்டிய ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தடுப்பூசி மருந்துகளை காலத்தில் வழங்காததால் தடுப்பூசி போடும் பணி தடைபட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கடிதங்கள் மூலமும், பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்திய பின்னரும் ஒன்றிய அரசு பாரபட்ச அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்கள் உயிரோடு விளையாடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் முதலமைச்சர் கேட்டுள்ளபடி உற்பத்தியாகும் தடுப்பு மருந்துகளில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து, தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என பாஜக ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.