கொரோனா நிதியாக மேலும் 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவின் எதிர்கால சுகாதார அவசர நிலைகளின் போது நாட்டை தயார் நிலையில் வைத்திருக்க இந்தத் தொகை வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இந்தியா பெற்றுள்ளது. கொரோனா தாக்குதலால் அமெரிக்கா திணறிக் கொண்டிருந்த போது இந்தியா உதவி செய்ததாகவும், தற்போது இந்தியா நோய்த் தொற்றின் பிடியில் இருக்கும் போது அமெரிக்கா உதவுவதாகவும் சர்வதேச வளர்ச்சிகான அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வது, மனரீதியான ஆலோசனை வழங்குவது, மருத்துவ சேவைகளை அளிப்பது, கிராமப்புறங்களில் மருத்துவ சேவைகளை நீட்டிப்பது ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.