அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன்

கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த சூழலில் ஓராண்டுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்து தன்னலமற்ற சேவையாற்றி வருகிறார்கள் நமது மருத்துவர்கள்.  அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறேன். சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில்தான், அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட குறைவாகவே ஊதியம் வழங்கப்படும் நிலையும் உள்ளது.  ‘நீதிமன்ற குமாஸ்தாவின் ஊதியத்தைவிட அரசு மருத்துவர்களின் ஊதியம் குறைவாக இருக்கிறதே…’ என்று உயர் நீதிமன்றமே வேதனையுடன் குறிப்பிட்டது. அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பல முறை வலியுறுத்தியும், மாநில அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை. அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, 2009-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2017-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மறுஆய்வு நடைபெறவில்லை. ஊதிய உயர்வு கிடைக்காததால் 2018-ல் போராட்டங்கள் நடைபெற்றன. அரசு மருத்துவர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்து அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த  சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ள அரசாணை எண் 293-ன் படி மருத்துவப் பணியாளர்களுக்கான ஊதியப் படிகளை மட்டுமே வழங்கியிருக்கிறது. இதனால் கிராமப் புறங்களில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இல்லை. ஊதியப் படிகளும் குறிப்பிட்ட துறைகளுக்கான மருத்துவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. பல மருத்துவ சங்கங்கள் ஊதியப் படியை மறுத்து ஊதிய உயர்வையே வலியுறுத்தியுள்ளன. தற்போது உள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் ‘காலம் சார்ந்த ஊதிய உயர்வை’ 5, 9, 11, 12 ஆண்டுகள் என மாற்றி கொடுக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டின் அரசாணை எண் 354-ஐ உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக மன்றாடி வருகின்றனர். அரசு மருத்துவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசு சிலருக்கு மட்டுமே ஊதியப் படிகள் வழங்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் இன்னல்களைக் கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் தொடர்பு: டைமன் பாபு