கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கோமங்கலம் பகுதியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுனர் ரமேஷ் (30). அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா (19) இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில், சரண்யாவுக்கும் அவர் கணவர் ரமேஷுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு ரமேஷ் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். அருகில் இருந்த உறவினர்கள் தீக்காயங்களுடன் இருந்த ரமேஷை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து மனைவி சரண்யா மற்றும் அவரது உறவினர்களிடம் கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.