கீழடி அருகே கொந்தகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

கீழடி அருகே கொந்தகையில் ஒரே அகழாய்வு குழியில் இருந்து 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொந்தகையில் 2ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடக்கும் நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் இதுவரை மண் பானை, குவளை, தங்க வளையம், பகடை, உழவுக் கருவி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், மண் குவளைகள், பாசிகள் போன்றவை கண்டறிப்பட்டன. இந்நிலையில் கொந்தகையில் இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு ஒரு குழியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதன் அருகிலேயே மற்றொரு மனித எலும்புக்கூடு நேற்று கண்டெடுக்கப்பட்டது. இது 3 அடி நீளம் கொண்டதாக உள்ளது. இந்நிலையில் இன்று ஒரே அகழாய்வு குழியில் இருந்து 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.