தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஒரு வருட காலமாகவே பள்ளிகள் திறக்கப்படவில்லை. வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு அதன் மூலம் பாட வாரியாக தனித்தனி ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் ஊரடங்கு காலத்திலும் கல்வி கற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் 2021-22 ம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டும் தொடங்கியுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. புத்தகங்கள் வழங்கப்பட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது. ஆன்லைன் வகுப்பு மற்றும் கல்வி தொலைக்காட்சி வகுப்புகளை தொடர்ந்து இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் நடத்தப்படவுள்ளது. கிராமப்புறங்களில் இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒலி வடிவிலான பாடங்கள் பயனுள்ளதாக இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 31ம் தேதி வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்படும் எனவும், அதன் படி திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக 80 நிமிடங்கள் பாடங்கள் ஒளிபரப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் முதல் 20 நிமிடம் 10ம் வகுப்பு பாடங்களும், அடுத்ததாக 3 இருபது நிமிடங்களுக்கு 12ம் வகுப்பு பாடங்களும் ஒலிபரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.