தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பிஆர் பாண்டியன் அறிவிப்பு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு,வடக்கு மாவட்டங்களில் நிர்வாகிகள் அவசரக் கூட்டம் தஞ்சை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் என் அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட செயலாளர் எம் மணி,வடக்கு மாவட்ட செயலாளர் பாட்சா ரவி, திருப்பதி வாண்டையார், பாஸ்கரன், அர்ச்சுணன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிஆர் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது… கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மேகதாட்டு அணை கட்டியே தீர்வேன் என்று சவால் விடுகிறார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது,அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்க முயற்சிக்கும் செயல்.இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மேட்டூரில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை நம்பி சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி துவங்கியுள்ளது அதனை தொடர முடியாத நிலை உள்ளது.கருகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடி மேற்க்கொள்ள முடியுமா?என்கிற கேள்வி எழுந்துள்ளது. விவசாயிகள் மிகப் பெரும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார். ஆணையத்தை சந்தித்து தமிழகத்துக்கான 40 டிஎம்சி தண்ணீரை பெற வலியுறுத்த வில்லை. ஜல் சக்தி துறை அமைச்சரோ பிரதமரோ தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்கிற பொறுப்புணர்வுடன் செயல்பட மாட்டார்கள். காவிரி மேலாண்மை ஆணைய தலைவர்தான் கண்காணிப்பு குழுவை அனுப்பி தண்ணீரை பெற்று தரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் கார்த்து & ஃ ஏமாற்றமளிக்கிறது. மேகதாது அணை கட்டுமான பணியை கட்டுவதற்கு தூண்டுவதே மத்திய அரசுதான்.பிரதமர் பின்புலம் இல்லாமல் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இவ்வளவு துணிவாக பேசமுடியாது. எனவே மத்திய அரசை மட்டும் நம்பி தமிழகத்திற்கு பயனில்லை. காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை சந்தித்து அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும். இல்லையேல் உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருக்க வேண்டும். இந்நிலையில் வரும் ஜூலை 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் ராசிமணல் அணை கட்டுவோம், மேகதாது அணையை தடுத்து நிறுத்துவோம்,கருகும் பயிரை காப்பாற்ற உரிய தண்ணீரை பெறுவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து ஆணையத்தை கண்டித்தும் வலியுறுத்தியும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறோம். ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.இனியும் காலம் தாழ்த்தாது தமிழக முதலமைச்சர் உரிய அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்