‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’, ‘அக்கி ரவ்வா’ (தெலுங்கு) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏ எல் ராஜா, தனது நண்பர்களுக்காக ‘ஓரு வினா, ஓரு விடை’ என்ற ஆல்பத்தை தற்போது இயக்கியுள்ளார்.
‘சின்ன மாப்பிள்ளை’, ‘மகாநதி’, ‘வியட்நாம் காலனி’, ‘செங்கோட்டை’ மற்றும் ‘கண்ணுபட போகுதயா’ போன்ற திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் இயக்குநர் ஏ எல் ராஜா. இந்த ஆல்பத்தைப் பற்றி இயக்குநர் ஏ எல் ராஜா பேசுகையில், “இசை அமைப்பாளர் ஆர் எஸ் ரவிப்பிரியன் மற்றும் பாடலாசிரியர் செந்தமிழ் ஆகியோர் ஒரு பாடலை பதிவு செய்தனர். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பாடலை இயற்றி அதற்கான காட்சிகளை அமைக்க என்னை அவர்கள் அணுகினர். அவர்கள் என்னுடைய சிறந்த நண்பர்கள் என்பதால், நான் அந்த பணியை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளேன்,” என்றார். இயக்குநர் ஏ எல் ராஜா மேலும் கூறுகையில், “பாடலின் தனித்தன்மை என்னவென்றால், பாடலின் நாயகன் ஸ்ரீஹரி பேசவும் கேட்கவும் முடியாதவர் ஆவார். ஆனால் அவர் மிகவும் திறமையானவர். ஏற்கனவே ஒரு மலையாளம் படத்தில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். அவர் நடனமாடுவதிலும் வல்லவர். ஸ்ரீஹரி இந்தப் பாடலில் நன்றாகப் பொருந்துவார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், அவரும் எனது கணிப்பை உண்மையாக்கியுள்ளார். தற்போது நான் இயக்கி வரும் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்திற்குப் பிறகு இயக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீஹரியை கதாநாயகனாக நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தில் வித்தார்த், அப்பு குட்டி, விக்ரம் சுந்தர், பிளாக் பாண்டி மற்றும் சந்தானபாரதி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கும் ஆர் எஸ் ரவிப்பிரியன் தான் இசையமைக்கிறார்’, என்றார். காதல் தான் பாடலின் மையக் கரு என்று இயக்குநர் ஏ எல் ராஜா மேலும் கூறினார். “காதலை மறைக்க முடியும், ஆனால் ஒருபோதும் மறக்க முடியாது என்பதை தான் இந்த ஆல்பத்தின் மூலம் நாம் தெரிவிக்க முயற்சித்தோம். பாடலைப் பார்த்தவர்கள் அதைப் பாராட்டி, கவுதம் வாசுதேவ் மேனனின் பாடல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்