நீட் பாதிப்பைக் கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மனு தள்ளுபடி! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக தமிழக அரசு சார்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்த அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளதாக கரு.நாகராஜன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத்தாக்கல் செய்தன.  

இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்வு நோக்கில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில்,  தங்கள் தரப்பின் கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரி, எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட 18 பேரின் இடையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அதனடிப்படையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது,  “நீட் தேர்வு குறிப்பிட்ட பிரிவினருக்கு பாதிப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு நியமித்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானதல்ல” என்று தெரிவித்த தலைமை நீதிபதி அவர்கள், “நீட் தேர்வு தொடர்பான மக்களின் கருத்துகளையோ அல்லது அதன் பாதிப்பு தொடர்பாகவோ ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க மாநில அரசு கமிட்டி அமைக்கலாம். பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க முடியும். நீங்களாகவே இந்த குழு அமைத்ததன் நோக்கம் குறித்து ஏன் முன்முடிவு எடுத்துக் கொள்கிறீர்கள்.” என கண்டனம் தெரிவித்தார்.  பல்வேறு வாதங்களை தொடர்ந்து, விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் உள்ளது என்பதை பறைசாற்றும் விதத்தில், பாஜகவின் இந்த வழக்கிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் சட்ட ரீதியாக போராடியதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.  நீட் விவகாரத்தில் பாஜக முன்வைக்கும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது.  நீட் தேர்வு என்பது தமிழகத்தின் சமூக நீதிக்கெதிரான, பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கும் பேராபத்து என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழகத்தின் சமூக நீதியை பாஜகவால் ஒருபோதும் தகர்க்க முடியாது என்பதன் அடையாளமே இந்த வழக்கின் வெற்றியாகும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம்